விமலின் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டது தவறு

போலியான கடவுச்சீட்டை கொண்டு வெளிநாடு செல்ல முற்பட்டதாக விமானநிலயத்தில் கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச எம்.பி தொடர்பிலான விடயத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலையிட்டமை தொடர்பில் தனது அதிருப்தியை தெரிவிப்பதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத்சாலி தெரிவித்தார்.
 
கொழும்பு, கொல்லுபிட்டியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இவ்வாறான குற்றத்தை புரியும் ஒருவரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
 
'தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை நாம், எதிர்பார்த்திருக்கிறோம். 
 
தற்போதைய அரசாங்கம் 06 மாதங்களுக்காக முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில், பொருட்களின் விலை குறைக்கப்பட்டபோதிலும், தற்போது பொருட்களின் விலை அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
 
நிதி அமைச்சரிடம் நாம் எதிர்பார்ப்பது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி, மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.
 
பிரபலமான ஒருவரது புதல்வரின் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் பல பில்லியன் டொலர் பணம் உள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தன. ஆயினும், அரசு அவ்விடயம் குறித்து இதுவரை அரசு எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை.
 
தற்போதைய அரசு, திருடர்களை பாதுகாக்க முனைகின்றதா என, மக்களுக்கு சந்தேகம் எழுவதை தடுக்க முடியாது' என அசாத் சாலி இதன்போது தெரிவித்தார்.

Add new comment

Or log in with...