பாண்டிருப்பு திரௌபதையம்மன் வழிபாடும் சிறப்பும் | தினகரன்

பாண்டிருப்பு திரௌபதையம்மன் வழிபாடும் சிறப்பும்

சக்தி வழிபாடானது சிந்துவெளிக் காலம் முதல் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாடு என்பது வரலாறு கண்ட உண்மை. சக்தியை கண்ணகி காளி, முத்துமாரி, நாச்சியம்மன், பேச்சியம்மன், சீதையம்மன், திரெளபதியம்மன் என்ற பல பல நாமங்களில் கிராமிய மக்கள் நம்பிக்கை கொண்டு வழிபாடாற்றி வந்துள்ளனர். அந்த வகையில் பாண்டிருப்பு என்னும் கிராமத்தில் திரெளபதை அம்மன் வழிபாடும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாண்டியூர் மக்கள் திரெளபதை அம்மனுக்கு வருடா வருடம் 18 நாட்கள் அலங்கார உற்சவம் எடுத்து, விரதம் அனுட்டித்து அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர். இவ்வாண்டும் 08.09.2015 இல் இவ்வாலய உற்சவம் கொடியேற் றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

19.09.2015 இல் கல்யாணக்கால் வெட்டுந்திரு விழாவும், 23.09.2015 இல் வனவாசத் திருவிழாவும் நடைபெற்றன. 24.09.2015 இல் தவ நிலையும், 25.09.2015 இல் தீமிதிப்பு வைபவமும், 26.09.2015 இல் பாற்பள்ளய வைபவமும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மகா பாரதக் கதையின் ஒவ்வொரு விடயங்களையும் பக்த அடியாருக்கு வெளிக்காட்டுகின்றன.

மருத சேனனின் மகனான எதிர் மன்னசிங்கன் என்னும் குறு நில மன்னன் கி.பி. 1526 இல் மண்முனை, கரைவாகு, பொத்துவில் பற்றுக்களை நிருவகித்து வந்தான். மட்டக்களப்பு பிரதேசம் கண்டி இராச்சியத்தின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலம். இக்காலத்தில் இந்தியாவின் வட நாட்டுக் கொங்கு நகரில் வைணவ குலத்திலே தோன்றிய ‘தாதன்’ என் னும் சமயப் பெரியார் மகா பாரதக் கதையை ஏட்டிலே காவியமாக வரைந்து, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சபைகளில் பாடிக்காட்டிப் பரிசுகளைப் பெற்று வந்தார்.

இவர் இலங்கையில் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், கதிர்காமம் போன்ற புண்ணிய தலங்களையும் தரி சிக்க விரும்பித் தனது தம்பி தானனுடன் இலங்காபுரி வந்தார். வரும்போது பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் விக்கிரகம் பாண்டவர் பத்தினியாகிய திரெளபதையின் விக்கிரகம், உட்படப் பல அடையாளச் சின்னங்களையும் எடுத்து வந்தார் என்பதை செப்பேடுகளின் துணை கொண்டு வித்துவான் எப்.எக்ஸ்.ஸி. நடராஜா ‘மட்டக்களப்பு மான்மியம்’ என்ற நூலில் குறிப் பிட்டுள்ளது நோக்கற்பாலது.

தாதனும் தம்பியும் காவியுடுத்து கமண்டல தாரியாய் இலங்கைக்கு வந்து பல தலங்களையும் தரிசித்த பின்னர் அவ்வத் தலங்களில் பாண்டவர் வர லாற்றைப் பாடிக்காட்டினர். இறுதியாகக் கதிர்காமம் வந்து ஆலயப்பூசைகளிலும் கலந்து கொண்டு தீர்த்தமாடி குமுனை வழியாக திரும்பிய பக்தர்களுடன் சேர்ந்து நாகர்முனைக்கு (திருக்கோவில்) ஆடி அமாவாசையன்று வந்து சேர்ந்தனர். அங்கு தங்கியிருந்த போது மகாபாரத இதிகாசத்தைப் பாடிப் பக்தர்களைப் பரவசப்படுத்தினர்.

இதையறிந்து திக்கதிபதியான வீமாப்போடி என்பார் இவர்களை அழைத்து விசாரித்து தனது பகுதியில் ஓரிடத்தில் திரெளபதைக்கு கோயில் அமைத்துப் பாரதப் போரின் தாற் பரியத்தையும், கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளையும் தம்பகுதி மக்களுக்கும் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தாதன் மனம் மகிழ்ந்து, தனது அபிலாஷை நிறைவேற அருள் பாலித்த நாகர்முனை (திருக்கோவில்) பிரானை வணங்கினார். கோயில் அமைப்பதற்கேற்ற சூழலுள்ள இடத்தைத் தெரிவு செய்யுமாறு திக்கதிபதியைக் கேட்டுக் கொண்டார்.

திக்கதிபதி குறுநில மன்னனான எதிர்மன்னசிங்கனிடம் கூறினார். எதிர்மன்னசிங்கன் தாதனைச் சந்தித் தான். தாதன் மகாபாரதக் கதையை அவரிடம் விளக்கிக்கூறி, மகாபாரத் தில் சொன்னதன்படி, வனவாசம் செல்லுதல், பார்த்தன் சிவனிடம் பாசுபதம் பெறுதல் (தவநிலை) துரி யோதனனாதியோரைக் கொன்றதன் பின்பு,

அக்கினி குளித்து மீண்டும் இந்திரப்பிரஸ்தம், அஸ்தினாபுரம் என்பவற்றை ஆட்சி செய்தல் என்னும் நிகழ்ச்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்றும், அதற்கு சமுத்திரக் கரையை அன்மித்ததும், வன சஞ்சாரத்துக்கேற்ற சூழலுள்ள இடமே பொருத்தமானது என்றும் கூறினார்.

குறுநில மன்னனும் இதைக்கேட்டு அவர்களையும் அழை த்துக்கொண்டு நாகர்முனையிலிருந்து கடற்கரை ஓரமாக வரும்போது கடலை அண்மியதும் பெரும்பாலும் தரிசு நிலமாக இருந்ததும், ஆலமரங்கள் அடர்த்தியாகக் காணப்பட்டதுமான ஆலஞ்சோலை என்னும் இடம் (பாண்டிருப்பு) பொருத்தமானதாக இருந்தமையால் இவ்விடத்தையே தெரிவு செய்தனர்.

தாதனும் தம்பியும் இவ்விடத்தில் காணப்பட்ட கொக் கட்டி மரம் ஒன்றில் அட்சரத்தைப் பதி த்து திரெளபதை சிலையையும் விஷ்ணு சிலையையும் வைத்து வணங்கி பூசை ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். தம்பி தானனிடம் விஷ்ணு சிலையைக் கொடுத்து நீலாவணையில் வைத்துப் பூசை செய்வித்தான். இங்கு அம்மனுக்கு 18 நாட்கள் உற்சவம் நடத்தி தீவளர்த்து அதிலிறங்கி மீண்டும் காட்டினான். அன்று முதல் இன்றுவரை அந்த நடைமுறையே இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாண்டவர் கதையைப் பிரதிபலிக்கத் தொடங்கிய காலம் முதல் ஆலஞ் சோலைக் கிராமம் “பாண்டிருப்பு” என வழங்கப்படலாயிற்று.

அதாவது பாண்டவர் இருப்புக் கொண்ட இடம் பாண்டிருப்பாயிற்று என்பது மரபு.

இவ்வாலயத்தில் பெரிய கோயிற் கோபுரங்களோ தூபிகளோ இல்லை. ஆனால் மகோற்சவ, பக்திச் சிறப்பு மிக்கது. கிழக்கு நோக்கிய சந்நிதானம். அம்மனை நோக்கிய வண்ணம் வீரபத்திரர் ஆலயம் உண்டு. சுற்றுப் பிரகாரங்களில் காடேறி கோயில் கமல கன்னிக் கோயில், பட்டாணி கோயில், வைரவர் கோயில் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. வீரபத்திரர் கோயிலுக்குப் பின்புறமாக வெளி வீதியில் திக்குளிப்பு ஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலய வருட உற்சவம் தாதன் வகுத்த படி புரட்டாதி மாதம் அமாவாசை முன் பின்னாக வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றமும் 18ம் நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பும் இடம்பெறும்.

பூசை முறை ஆகமமுறை சார்ந்ததல்ல. பூசை செய்பவர் பூசாரி என அழைக்கப்படுகின்றார். காலைப்பூசையும் மாலைப் பூசையுமே இடம்பெறுகின்றன. பஞ்சபாண்டவர், கிருஷ்ணன், திரெளபதை, காளி, வீரபத்திரர் எனப் பலர் கொலுவிருப்பர், விரதம் அனுட்டித்தே கொலுவிருக்கின்றனர். 18 நாட்களும் இவர்கள் முழு நேரமும் கோயிலிலே தங்கியிருப்பர். எனவே இவர்களைக் கோயிலார் என்பர்.

இவ்வாலயக் கொடியேற்ற நாளன்று பூசையில் உபயோகப்படுத்தும். வில், வாள், பிரம்பு, மணி, தண்டாயுதம், தம்பட்டம், சல்லாரி, உடுக்கு, சங்கு, தாரை, சிலம்பு, சக்கரம் என்பவற்றைக் கோயிலார் புடைசூழப் பூசாரிமாருடன் கடலுக்கு எடுத்துச் சென்று கழுவி வந்த பின் கொடியேற்றப்படும். அதைத் தொடர்ந்து காலைப்பூசையும் மாலைப்பூசையும் நிகழும். 18 நாள் உற்சவத்தில் 7ம் நாள், 12ம் நாள், 16ம், 17ம், 18ம் நாள் திருவிழாக்களே பக்த அடியார்களைப் பரவசப்படுத் துவனவாக உள்ளன.

7ம் நாள் சுவாமி எழுந்தருளச் செய்தல் என்னும் திருவிழா இடம்பெறும். இது தாதன் காலத்தில் நீலாவணையில் இருந்து விஷ்ணுவை பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து வருவதாக நடைபெற்றது.

அடுத்த முக்கிய நிகழ்வாக 12ம் நாள் கலியாணைக் கால் வெட்டும் திருவிழாவைக் கூறலாம். அன்றையத் திருவிழாவில் சப்பரக் காட்சி இடம்பெறும். இதற்கென்று வளர்க்கப்பட்டு வரும் பூவரசு மரத்தை கோயிலார் அனைவரும் வந்து பூசை மடைவைத்து மரத்தைச் சுற்றி வந்த பின் 10 - 15 அடி நீளமுள்ள தடியை வீமன் வெட்டி விடுவார். அதனை வெள்ளைத் துணியால் சுற்றி பஞ்சபாண்டவர் அலங்கரிக்கப்பட்ட பூம்பந்தலுட் சென்று சப்பரம் முன்னே செல்ல தூக்கிக் கொண்டு செல்வர். திரெளபதை அம்மன் ஆலய முகப்பு மண்டபத்துள் வைத்து பல நிறச் சிலைகளைச் சுற்றி அலங்கரித்து விடுவர்.

16ம் நாள் மகாபாரதத்தின் உச்சக்கட்டம். இது வனவாசம் எனப்படும். அன்றைய தினம் 3-4 மணியளவில் கோயிலார் உணவு, உடை எடுத்துச் செல்வது போல் பூசை முடிந்ததும் எல்லோரும் பஞ்சபாண்டவர் போல் அலங்கரித்து வெற்றிலை, பழம், பாக்கு முதலியவற்றையும், வில், வாள் சக்கரம் என்பவற்றையும் எடுத்து காடு செல்வது போல் கோயிலுக்கு மேற்கே செல்வர். பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், நூற்றுக்கணக்கான காவடிகளும், கற்பூரச் சட்டி எடுப்போரும், புடைசூழ இவ்வைபவம் நடைபெறும்.

‘வாள் மாற்றும் சந்தி’ எனப் பெயர் பெறும் கோயிலின் முன் சந்திக்கு வந்ததும் வீமர் தருமரை வலம் வந்து வாளைப் பெற்று வணங்கிச் சென்று விடுவார். ஏனையோர் வனவாசம் செய்யக் காடு செல்வர். வீமர் வாழைக்குலை, மாங்காய் என்பவற்றை வெட்டி வீழ்த்தி காடு செல்வோருடன் வந்து சேர்ந்து விடுவார்.

இவ்வனவாசம் மணற் சேனையூடாகச் சென்று நற்பிட்டிமுனை சிவன் கோயிலை அடைந்து அங்கு சிறிது நேரம் பஞ்சபாண்டவர் அமர்ந்து பின் சேனைக்குடியிருப்புப் பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில்களைத் தரிசித்து சேனைக்குடியிருப்புக் காளி கோயிலை வந்தடைவர். அக்கோயிலுடன் 11 வருட வனவாசம் முடிவடைவதாகவும் ஒரு வருட அஞ்ஞாத வாதம் தொடர்வதாகவும் அங்கிருந்து மேட்டு வட்டையூடாக நிசப்தமாகச் சென்று பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை அடைவர். அங்கிருந்து அம்மன் ஆலயத்துக்கு செல்வர்.

17ம் நாள் வியாழக்கிழமை தவ நிலைப்பூசை நடைபெறும். இவ்வைபவம் நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெறும். இது அருச்சுனன் பாசுபத அஸ்திரம் பெறும் பொருட்டுச் சிவனை நோக்கிச் செய்யும் தவத்தைக் குறிப்பதாகும்.

18ம் நாள் வெள்ளிக்கிழமை தீக்குளிப்பு வைபவம் இடம்பெறும். இதுவே 18 நாள் திருவிழாவில் மிக உச்சக் கட்டமான நிகழ்ச்சி. பார்ப்பவர் உள்ளங்களை உடலை உருக்கும் காட்சி. அன்றைய தினம் கொலுவிருந்த அனைவரும் சமுத்திரம் சென்று நீராடிப் பூசை வாழிபாடு செய்த பின் உடல் முழுவதும் மஞ்சள் பூசி வேப்பம் இலை கொத்தாக ஏந்திக் கொண்டு வருவர்.

இங்கே ஏற்கனவே தீமூட்டப்பட்டு சமப்படுத்தப்பட்ட தீக்குழியினுள் வெற்றிலை, பழம், பாக்கு, அரிசி என்பவற்றைத் தீக்குழியில் இட்டு ஒருவர் பின் ஒருவராக தீக்குழியினுள் இறங்கி நடந்து செல்வர். சாட்டையடியும் இடம்பெறும். இத்தீக்குளிப்பு வைபவம் பக்திப் பரவச மூட்டுவதாக அமைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பாற்பள்ளயம் இடம்பெறும். இதனுடன் அம்மன் உற்சவம் நிறைவு பெறும்.

செல்லையா - பேரின்பராசா
துறைநீலாவணை நிருபர்

 


Add new comment

Or log in with...