அமைச்சர்களுக்கு எதிராக விக்னேஸ்வரன் விசாரணை

 

வட மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசாரணைக்குழு இன்றிலிருந்து (06) தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. அமைச்சர்கள் மீதான ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை தபால் மூலம் அல்லது நேரிலும் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண அமைச்சர்கள் மீது பல்வேறு முறைப்பாடுகள் தனக்கு கிடைத்தவண்ணம் உள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையான பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசாரணை குழுவை நியமித்து அதனூடாக விசாரணை மேற்கொள்ளவது என்ற ஆலோசனையை முதலமைச்சர் சபையில் முன்வைத்திருந்த போது, அமைச்சர்களை வெளியாட்கள் விசாரணை செய்ய முடியாது எனவும், உறுப்பினர்களை கொண்டே விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

எனினும் உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டால் அது பக்கச்சார்பான விசாரணையாக அமையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது என சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நம்பகத்தன்மையான விசாரணைக்கு வெளித்தரப்பினரே மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் கோரிக்கை சபையால் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான குழு இன்றைய  தினம் நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவில் முன்னாள் நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமேஸ்வரா, மற்றும் முன்னாள் அரச அதிபர் எஸ். பத்மநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாண பிரதம செயலர் அலுவலகத்தில் செயற்படும் இந்த விசாரணைக்குழு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தமது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...