ஏறாவூர் இரட்டை கொலை; சந்தேகநபர்கள் 06 பேரும் ஒக். 05 வரை விளக்கமறியல்

 

ஏறாவூர் -இரட்டைக்கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டுள்ள  சந்தேக நபர்கள் 06 பேரும்  எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆந்திகதிவரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று (23) ஆஜர் செய்யப்பட்டதையடுத்து நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி, அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொலைக்கான ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து விஞ்ஞான ரீதியிலான உறுதிப்பாட்டிற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அவற்றை அனுப்புமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள தனது வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்.எம். சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகிய இருவரும், கடந்த செப்டெம்பர் 11 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தமை தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டவேளையில், நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையை காணக் கூடியதாக இருந்தது.  

(ஏறாவூர் குறூப் நிருபர் - நாஸர்)

 


Add new comment

Or log in with...