பட்ஜட்டில் மாற்றம் செய்தார்; பிரேஸில் ஜனாதிபதி நீக்கம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பிரேஸில் ஜனாதிபதி டில்மா ரொஸ்ஸெப், பதவி நீக்கப்படுவதற்கு அந்நாட்டு செனட் சபை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்கியுள்ளது.

பிரேஸிலின் 36 ஆவது ஜனாதிபதியான டில்மா ரொஸ்ஸெப் கடந்த மே 12 ஆம் திகதி இடம்பெற்ற முதலாம் கட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

68 வயதான ரொஸ்ஸெப், கடந்த 2014 ஆம் ஆண்டு, தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக இடம்பெற்ற தேர்தல் பிரசார காலத்தின்போது, வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை, அத்திட்டங்களுக்கிடையில் மாற்றியமைத்தார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு சட்டத்திற்கு அமைய குறித்த விடயம் சட்டவிரோதமாக கருதப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு செனட் சபையில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக, 61 செனட் சபை உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, 20 பேர் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

அதன் அடிப்படையில், அவரது இடதுசாரி கட்சியின் பதவிக்காலம் 13 வருட ஆட்சி நிறைவுக்கு வந்துள்ளது.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடையவிருந்த அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வந்ததை அடுத்து, அந்நாட்டின் உதவி ஜனாதிபதியான மத்திய வலது ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த மைக்கல் ட்ரமர், இடைக்கால ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டில்மா ரொஸ்ஸெப், ஏற்கனவே இருந்த ஜனாதிபதிகள் நிதி முறைமைகள் தொடர்பில் மேற்கொண்ட விடயங்களையே தான் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...