15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; விடுதிக்கு சீல்

கிளிநொச்சி பளைப்பகுதியில் பதினைந்து வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவதற்கு இடமளித்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட விடுதி உரிமையாளரும் சம்பவம் தொடர்பான நான்காவது சந்தேகநபருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்காவது சந்தேகநபரான விடுதி உரிமையாளரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதியொன்றில், பதினைந்து வயதுச்சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பாக பளை பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிரதான சந்தேகநபர் தலைமறைவான நிலையில் குறித்த விடுதியில் பணியாற்றிய விடுதி முகாமையாளர் உள்ளிட்ட மூவரை நேற்று (04) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த மூவரையும் எதிர்வரும் 14ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் விடுதிக்கும் சீல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று (04) மாலை குறித்த விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடுதியை வெளிநாட்டில் உள்ள ஒருவர் நடத்தி வருவதாகவும், விடுதியின் தற்போதைய உரிமையாளர் விடுதியை விட்டு தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவித்த பொலிசார் இன்றையதினம் (05) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில், குறித்த விடுதிக்கு தற்போது பொறுப்பாகவுள்ள சந்தேகநபரை ஆஜர்படுத்தியதையடுத்து அவரையும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிரதான சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த விடுதியின் உரிமையாளரான சந்தேகநபர் சார்பாக ஆஜரான வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்திரணியுமான ஜயந்தன் குறித்த நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரிய போதும் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மன்று கூடிய கவனம் எடுத்து செயற்படும் எனவும், குறித்த விடுதியில் இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(பரந்தன் குறுப் நிருபர் - யது பாஸ்கரன்)


Add new comment

Or log in with...