வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு ஆரம்பம்

 
தாமதியாது உங்கள் பெயரை பதியுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு
 
RSM
 
இவ்வாண்டுக்கான (2016) வாக்காளர் இடாப்பு பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருகின்றது. கிராம உத்தியோகத்தர்களினால் இந்த பதிவு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
 
1998.05.31 ஆம் திகதிக்கு முன்பு பிறந்த 18 வயதை பூர்த்தி செய்த அனைவரும் இந்த வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 
இவ்வாண்டுக்கான (2016) வாக்காளர் இடாப்பு பதிவு செய்யும் நடவடிக்கை கடந்த மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 
 
இந்நடவடிக்கைள் இம் மாதம் (ஜுன்) இறுதிப்பகுதியில் நிறைவடையவுள்ளது.
 
இதேவேளை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்வதற்கு தாமதியாது நடவடிக்கை எடுக்க கோரும், அறிவிப்பு பதாதைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் தொங்க விடப்பட்டுள்ளன.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தொங்கவிடப்பட்டுள்ள இந்தப் பதாதைகள் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் தொங்க விடப்பட்டுள்ளன.
 
"தகைமையுடைய அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கிய தேருநர் இடாப்பு"
 
"உங்களது பெயரை தேருநனர் இடாப்பில் பதிவு செய்து கொள்வதற்கு தாமதியாது நடவடிக்கை எடுக்கவும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் செய்தியொன்றாகும்" என அந்த அறிவிப்பு பதாதையில் எழுதப்பட்டுள்ளது.
 
(புதிய காத்தர்ன்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 

வாக்காளரொருவராவதற்குத் தேவையான அடிப்படைத் தகைமைகள்
 
1. இலங்கை பிரசையொருவராகவிருத்தல்.
 
2. குறித்த தேருநர் இடாப்பில் பதிவதற்காக தகைமைபெறும் தினமான யூன் 01 ஆம் திகதிக்கு 18 வயது பூர்த்தியடைந்திருத்தல்.
 
3. குறித்த முகவரியில் சாதாரண வதிவைக் கொண்டிருத்தல்.
 
4. அரசியலமைப்பின் 89 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையீனங்களுக்கு யூன் மாதம் 01 ஆம் திகதியாகும் போது உட்படாத ஒருவராகவிருத்தல்.
 
(செயல்வலுவிலுள்ள ஏதேனும் சட்டமொன்றின் கீழ் சித்தசுவாதீனமற்ற ஒருவராக இல்லாதிருத்தல். கடந்த ஏழு வருட காலத்தினுள் நீதிமன்றத்தினால் குற்ற த்தீர்ப்பளிக்கப்பட்டு விதிக்கப்பட்ட 06 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமொன்று சிறைத்தண்டனை அனுபவித்த அல்லது அனுபவித்து வருகின்ற நபரொருவராக இல்லாதிருத்தல் தேர்தல் சட்டங்களுக்குரிய தவறுகளுக்குக் குற்றவாளியொருவராக இல்லாதிருத்தல்.)
 
5. எந்தவொரு நபருக்கும் தனது பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட தேருநர் இடாப்புக்களில் அல்லது ஒரு தேருநர் இடாப்பில் பல இடங்களில் உட்சேர்ப்பதற்கோ தொடர்ந்து வைத்திருப்பதற்கோ உரிமை கிடையாது.
 
வாக்காளரொருவராவதற்குத் தேவையான அடிப்படைத் தகைமைகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதம் 01 ஆம் திகதிக்கு பூர்த்தியடைவதை கருத்தில் கொண்டு தேர்தல்கள் ஆணையாளரால் ஒவ்வொரு வருடமும் யூன் மாதம் 01 ஆம் திகதி (வாக்காளர் தினம்) என 2013 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனம் செய்யப்பட்டு தகைமையுடைய அனைவரையும் தேருநர் இடாப்பில் உட்சேர்த்துக் கொள்ளும் நோக்கோடு யூன் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னரும், பின்னரும் ஒரு வாரம் நாடு பூராகவும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
 

Add new comment

Or log in with...