குளங்கள், ஏரிகளின் திருத்தத்துக்கு தடை

 
RSM
 
வடமத்திய மாகாணத்திலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளின் திருத்தப் பணிகளுக்கு அநுராதபுரம் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த சிலதினங்களாக நிலவிய கடும் மழை காரணமாக வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து குளங்களும் நீர் நிரம்பி வழிகின்ற நிலையில், குறித்த குளங்களிலுள்ள திருத்தப் பணிகளை அவசர தேவையாக கருதி அப்பணியை மேற்கொள்ள வடமத்திய மாகாண சபை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
 
எனினும் அதற்கான கேள்விப் பத்திரங்கள் (Tender) கோரப்படாமல் அரசியல்வாதிகளின் நண்பர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர்களுக்கும், குறித்த திருத்தப்பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கக்கப்பட்டமையால் அதற்கெதிராக வழக்கு  தொடரப்பட்டிருந்தது.
 
இது தொடர்பாக நேற்று (31) அநுராதபுரம் உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு பிரதிவாதிகளாக வடமத்திய மாகாண முதலமைச்சர், ஆளுநர், மாகாண அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
 
விசாரணைகளை அடுத்து, எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை திருத்தப் பணிகளுக்கு தற்காலிக தடையுத்தரவு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குளங்கள் நீர் நிரம்பி வழியும். நிலைமையில் திருத்தப்பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வடமத்திய முதலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் வாதங்களை முன்வைத்த போதும் நீதவான் அவைகளை புறக்கணித்தார் .
 
(கல்நேவ தினகரன் விசேட நிருபர் - பைஸல் நப்ரின்)

Add new comment

Or log in with...