கிறிஸ்து பிறப்பு கூறும் வாழ்க்கை வழித்தடங்கள் | தினகரன்

கிறிஸ்து பிறப்பு கூறும் வாழ்க்கை வழித்தடங்கள்

[[{"type":"media","view_mode":"media_large","fid":"8670","attributes":{"alt":"","class":"media-image","height":"73","typeof":"foaf:Image","width":"480"}}]]

இன்றைய நாளை அகில உலகமும்ஆண்டவர் இயேசுவின் பிறப்பினால் மகிழ்ந்து கொண்டாடுகின்றது. கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மகிழ்ச்சியின் செய்தியாகும். சிறுவர்கள் முதல் முதியோர்கள் எல்லாரும் மகிழ்ந்து பாடி ஆடும் ஒரு கொண்டாட்டம் கிறிஸ்மஸ் ஆகும்.

கிறிஸ்மஸ் என்பது இறைவன் மனுக்குலத்தை மீட்க மனித அவதாரம் எடுத்து விண்ணகத்தை விட்டு மண்ணகத்தை நோக்கி வந்த நாளாகும். மனுக்குலத்தை மீட்க வேண்டுமென்பது இறைவனின் கனவு. இந்த கனவை இறைவாக்குனர்களுக்கூடாக தெளிவுபடுத்துகின்றார்.

அந்த மீட்பு புதிய உலகம் சார்ந்ததாக இருக்கும். போர் இல்லா சூழல் ஆயுதங்கள் எல்லாம் விவசாயக் கருவிகள். ஓநாயும் செம்மறியாடும் ஒன்றாய் தங்கும் சிங்கக் குட்டியும் கொழுத்த காளையும் கூடிவாழும் என ஏசாயா இறைவாக்குனருக்கூடாக கூற விளைகின்றார்.

அந்தக் கனவு நனவாகியது. ஆண்டவர் இயேசு மரியாளின் மகனாக மனுக்குலத்தை தேடிவந்த போது மண்ணகத்தில் நிறைவேறியது. இச்செய்தியினை மத்தேயு நற்செய்தி நூல் ஆசிரியர் இயேசுவின் குழந்தைப் பருவ வரலாற்றை எழுதும் போது அச்சம் துளிர்விடுவதைக் காண்கிறோம். கன்னி மரியிடம் நடந்த அபூர்வமான நிகழ்ச்சியை அறியாமல் யோசேப்பின் கலக்கம். மறைவாக மனைவியை விலக்கிவிட எடுத்த முடிவு. நூலை வாசிப்போருக்கு அச்சத்தைக் கொண்டு வருகிறது. (மத்தேயு 1 : 19)

ஞானிகளின் வருகை ஏரோதின் அரண்மனையை நோக்கி நகர்கிறது. அங்கே ஏரோதின் கொலை வெறி, பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. (மத்தேயு 2 : 16)

கொடூரமும் கொலை வெறியும் உலகமென மத்தேயு காட்டும் போது லூக்கா நற்செய்தி நூல் ஆசிரியர் இயேசுவின் பிறப்பால் ஏழை எளிய மக்களுக்கு மகி்ச்சி உண்டானது எனக் கூறவருகிறார். லூக்கா ஆசிரியர் ஆணுக்கு பெண் சரிநிகர் சமன் என பிறப்பின் செய்தியில் சொல்லத் தொடங்கி உயிர்ப்பின் செய்தியில் நிறைவு செய்கிறார். கிறிஸ்துவின் பிறப்பு ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்கியது என தன் நூலில் (21) இருபத்தியொரு இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

செக்கரியாவை ஆண்டவருடைய தூதர், தூபம் காட்டும் வேளையில் சந்தித்து அவருடைய மனைவி எலிசபேத் கர்ப்பம் தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பார் என்று சொன்னபோது செக்கரியா அதை நம்பவில்லை. நம்பாதபடியால் அவர் பேசமுடியாத ஊமையானார்.

இந்த செய்தி பல உண்மைகளைச் சொல்லுகிறது. நம்பிக்கை இல்லாதவர்கள் ஊமைகளாகத் தான் இருப்பார்கள். அது மட்டுமல்ல, செக்கரியாவுக் கூடாக பழைய ஏற்பாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார். இனி நீங்கள் தூபம் காட்டத் தேவை இல்லை. நீங்கள் அமைதியாக இருங்கள் என்று கூறும் பாணியைக் கையாண்டு ஒரு சாதாரண கன்னிப் பெண்ணை பேச வைக்கிறார்.

கன்னி மரியாள் ஒரு புரட்சிக் கீதத்தையே பாடுகின்றாள். ஆண்டவருடைய தூதர் உலக மீட்பரின் பிறப்பை மரியாதைகளுக்கு சொன்ன போது இறைவன் நேற்றும் இன்றும் நாளையும் தன் மகன் இயேசுவுக்கூடாக செய்ய இருக்கும் மாற்றுக் கலாசாரத்தை தூக்கிப் போடுகின்றார். இங்கே நடைபெறும் மாற்றுக் கலாசாரம் சமயத்திலே சமூகத்திலே பொருளாதாரத்திலே பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என மரியாள் கூறுகின்றார்.

பேசா மடந்தைகளாக இருந்த பெண் சமூகம் பெரும் புரட்சியின் துருவங்களாக வடிவம் எடுக்கின்றார்கள். இது இயேசுவின் பிறப்பினால் ஏற்பட்டது. இதே நூல் ஆசிரியர் இயேசுவின் உயிர்ப்பி்ன் செய்தியை முதலில் பெண்களுக்கு சொல்லப்பட்டதாக கூறும் வேளையில் எம்மாவூருக்கு சென்ற இரண்டு சீடர்களுக்கும் கூறப்பட்டதாக லூக்கா 24 ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். இங்கேயும் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமன் என்பதை ஆணித்தரமாக்குகிறார்.

பெண்கள் மதிக்கப்படாத ஒரு இறுக்கமான நாட்களில் பெண்களும் இறைவனின் படைப்புக்கள், அவர்களும் ஆண்களுக்கு சரி நிகரான மனிதப் படைப்புக்கள் என்பதை உலக மீட்பர் இயேசுவின் பிறப்பும் உயிர்ப்பும் அதை உறுதி செய்கிறது.

இயேசுவின் பிறப்பும் யூத சமூகத்திற்கு கூறப்பட்ட செய்தி மட்டுமல்ல உலக மாந்தர் அனைவருக்கும் உரியது. ஏழை என்பவர்கள் ஆண்கள், பெண்கள், அரசர்கள் ஆண்டிகள் என்ற பாகுபாடில்லை. அமைதியை, நிம்மதியை சந்தோஷத்தை தேடிய அனைவருக்கும் உரிய செய்தி.

இதை லூக்கா 2 : 10இல் வான தூதர்கள் மேய்ப்பர்களுக்கு பிறப்பின் செய்தியை கூறும் போது, “அஞ்சாதீர்கள் இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறும் போது இதில் எல்லாத் தரப்பினரும் உள்வாங்கப்படுகிறார்கள்.

இன்று கிறிஸ்து பிறப்பு பலருக்கு மகிழ்ச்சியை இன்றும் தரவில்லை. திரும்பவும் லூக்கா நூலுக்குள் நாம் சென்று இயேசுவின் பிறப்பில் தொடங்கும் மகிழ்ச்சி உயி்ர்ப்பில் நிறைவாக்கப்படுவதைக் காண்கிறோம். முடக்கு வாதமுற்றவர் குணமடைந்த போது மக்கள் எல்லோரும் மகிழ்கின்றார்கள். (லூக்கா 5 : 26) துன்புறுவோர் மகிழ்கின்றனர். (லூக்கா 6 : 23) இயேசுவினால் இறைபணிக்கு அனுப்பப்பட்ட 72 பேரும் மகிழ்ச்சியோடு திரும்பி வருகின்றார்கள். லூக்கா 10 ; 17 கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடப்போர் பேறுபெற்றோர் அவர்கள் மகிழ வேண்டியவர்கள் என்பதை மார்த்தா, மரியா நிகழ்வுக் கூடாக காண்பிக்கின்றார் (லூக்கா 10 : 38 – 41) லூக்கா நூல் ஆசிரியர் இம் மகிழ்ச்சியை தன் நூலில் அடுக்கிக் கொண்டே போகிறார். விண்ணக விருந்தின் மகிழ்ச்சி. கூனிப் பெண் குணமடைந்ததற் கூடாக மக்கள் அடைந்த மகிழ்ச்சி. இவை எல்லாவற்றையும் விட லூக்கா 15 இல் வரும் மூன்று உவமைகளான காணாமற் போன ஆடு, காணாமற்போன பணம், ஊதாரி மகன். ஆகியவற்றில் மகிழ்ச்சியின் உச்சம் காட்டப்படுகின்றது.

விழியிழந்தவர் பார்வை பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி, சக்கேயு இயேசுவையும் அவரது போதனையையும் ஏற்றுக்கொண்டபோது, ஏற்பட்ட மகிழ்ச்சி சீடர்களின் கூட்டம் இயேசுவின் புதுமைகளைக் கண்டு மகிழ்ந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்த இயேசுவைக் கண்டு சீடர்களின் மகிழ்ச்சி. இயேசு விண்ணேற்றம் அடைந்து சென்றதும் பெரும் மகிழ்ச்சி என லூக்கா ஆசிரியர் கூறும் செய்தி எல்லாரையும் மகிழ்ச்சிக்குள் கொண்டு வருகின்றது. இந்த மகிழ்ச்சி இயேசுவின் பிறப்பால் தான் மனுக்குலத்துக்கு ஏற்பட்டது.

உலகிற்கு இம் மகிழ்ச்சியைக் கொடுக்க ஆண், பெண் சமவுரிமையை ஏற்படுத்த ஏழை பணக்காரன் என்ற பொருளாதாரத்தில் சம பங்கீட்டை உருவாக்க இறைவன் மனிதனானர். இது இறைவன் எடுத்த இறுதி முடிவு என எபிரேயர் 1 : 1-2 பலமுனற பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்குனர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். எனக் காண்கிறோம்.

இதை நிறைவேற்ற இறைமகன் எல்லாவற்றையும் வெறுமையாக்கி அடிமையைப் போல் வந்தார் என பவுல் அடிகளார் பிலிப்பியர் 2 : 7இல் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானர் எனக் கூறுகிறார். வெறுமையாக்குதல் தான் கிறிஸ்மஸ். இறைவனின் வெறுமையாக்குதல் பலருக்கு வாழ்வைக் கொடுத்தது என யோவான் 1 : 4 அவரிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது எனக் கூறுகின்றார். இந்த ஒளி “பிறவினத்தாருக்கு இருள் அகற்றும் ஒளி” லூக்கா 2 : 32 இல் காணலாம்.

இயேசுவின் பிறப்பு இருள் அகற்ற வேண்டும். எங்கும் இருள் மயம். அன்று இயேசுவின் பிறப்பு ஏழை எளிய மக்களை ஆண் பெண் என்ற பாகுபாட்டை இல்லாது ஒழித்தது. இன்னும் இனவாதம் பேசும் சமயவாதிகள், அரசியல் வாதிகள் போதைப் பொருளுக்கு அடிமையாய் போய் உள்ள இளைஞர் கூட்டம் துஷ்பிரயோகங்களுக்கு அடிமையாகும் பெண்கள், சிறுவர்கள் நிலம் இல்லாமல், வீடுகள் இல்லாமல் தவிக்கும் மக்கள், போரின் நாட்களில் காணாமற் போன பிள்ளைகளின் உறவுகளின் முகவரிக்காக அலையும் குடும்பங்கள் எந்த குற்றமும் செய்யாமல் சிறைகளில் வாடும் உறவுகள் ஒருபுறம்.

ஊழல், கலாசாரம் மலிந்துபோயுள்ள நிலை. கறுப்புப் பண மோசடி, வீதியில் இறங்கி விட்டால் திரும்பி வருவோம் என நம்ப முடியாத வீதி விபத்துக்கள். என இருள் படர்ந்து செல்கிறது. இந்த இருளை அகற்ற சமவுரிமையை உருவாக்க நாம் எம்மை வெறுமையாக்க வேண்டும்.

உலக மீட்பர் இயேசுவுக்கு கிடைத்தது தீவனத் தொட்டி, கந்தைத் துணி, முதலில் தரிசித்தவர்கள் எளிமையாக மேய்ப்பர்கள். ஆனால் இன்று நாம் காணும் கிறிஸ்மஸ் கருத்தற்றதாய் போயுள்ளது. கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா பணம் சேகரிக்கும் ஒருவராக மாறியுள்ளார். கிறிஸ்மஸ் காலத்தில் உணவுக்காக, உடைக்காக, குடி போதைக்காக செலவு செய்யும் பணம் ஏராளம்.

ஆனால் ஒருநேர உணவுக்காக போராடும் ஒருவனுக்கு உணவு கொடுக்கிறோமா? நோயினால் அல்லல்படும் உன் அயலானை எண்ணிப் பார்க்கிறாயா? உறவுகளை தேடி அலையும் மக்களோடு ஒருநாள் பேசியிருக்கிறாயா? சிறையில் வாடும் பிள்ளைகளுக்காக ஒருநாள் செபித்திருக்கி்றாயா? இதுதான் நாம் செய்ய வேண்டிய வெறுமையாக்குதல். இதை நாம் செய்யாது விட்டால் கிறிஸ்து நம்மிடம் பிறக்க மாட்டார். சிந்திப்போம்.

அருட்பணி டி. எஸ். மதி  


There is 1 Comment

Pages

Add new comment

Or log in with...