கொவிட்–19 பாதிப்புற்றவர்களிடம் சர்வதேச நிபுணர் குழு விசாரணை

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அங்கு சென்றிருக்கும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவை சந்திக்கும்படி கோரப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றின் பூர்வீகத்தை கண்டறியும் விசாரணையை இந்த நிபுணர் குழு மேற்கொண்டு வருகிறது.

பல மாதங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்த சர்வதேச குழு சீனா செல்ல அனுமதி கிடைத்தது.

இதன்படி இந்த வைரஸ் தொற்று ஆரம்பித்த வூஹான் நகரை கடந்த ஜனவரி 14 ஆம் திகதி சென்றடைந்த நிபுணர் குழு, இரண்டு வாரம் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் சீன நிபுணர் குழுவுடன் ஒன்லை மாநாடு ஒன்றில் பங்கேற்றது. இந்தக் குழு களப்பணிகளில் ஈடுபட தயாராகி வருகிறது.

“பொய்யை பரப்பும் கருவியாக இந்த நிபுணர் குழு இருக்காது என்று நான் நம்புகிறேன்” என்று கொவிட்–19 தொற்றினால் தனது தந்தையை இழந்த சாங் ஹய் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரியில் வூஹான் நகருக்கு சென்ற நிலையில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இவரது தந்தை உயிரிழந்துள்ளார்.

“நாம் இடைவிடாது உண்மையைத் தேடுகிறோம். இது ஒரு குற்றமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனா வந்து இந்தக் குற்றத்தை மறைக்க விரும்பாது என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாங், வூஹான் நகரைப் பூர்வீகமாகக் கொண்டபோது தற்போது தெற்கு நகரான சென்சென்னில் வசித்து வருகிறார். சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் இருக்கும் உண்மையை அறிய அவர் போராடி வருகிறார்.

வூஹானில் நிகழ்ந்தவை தொடர்பில் செய்தி வெளியிட்ட சீன நாட்டு ஊடகவியலாளர் ஒருவருக்கு கடந்த மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று எப்படித் தோன்றியது என்பதை கண்டறியும் விஞ்ஞான ரீதியான ஆய்வு ஒன்றுக்காகவே நிபுணர் குழு சீனா சென்றிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயினால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேட்டி காண்பது மற்றும் மீளாய்வு செய்வது இந்த விசாரணைக்கு முக்கியமாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...