இந்திய வம்சாவளி மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

- இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இலங்கையில் வாழும்   இந்தியவம்சாவளி  மக்களின்  அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்  என  தோட்ட வீடமைப்பு மற்றும்  சமுதாய உட்கட்டமைப்பு  வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கண்டியில் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில் கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று  முன்தினம் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர்  தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசப்பிதா மகாத்மா காந்தி, தென்னாபிரிக்காவில் தங்கியிருந்தபோது, கறுப்பினர்களுக்காக, நிற பேதத்தை எதிர்த்துப் போராடி, 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி  அன்று தாயகம் திரும்பினார். வெளிநாட்டுக்குப் போய் ஓர் இந்தியர், அந்த நாட்டு மக்களுக்காகப் போராடி, அவர்களுக்குச் சேவை செய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துத் திரும்பிய அந்நாளை நினைவுகூர்வதற்காகவே, ஆண்டுதோறும் `பிரவாசி பாரதிய திவாஸ்' நடத்தப்படுகின்றது.

குறிப்பாக எமது இளைஞர்கள்   இன்று  எமது பாரம்பரிய கலாசார மேம்பாடுகளுடைய   உறவை மறந்துவருகின்றனர்  என்பது ஒரு கசப்பான உண்மை. இந்த விடயத்தில் இந்திய அரசு உதவிபுரிய வேண்டும்.

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில்  மிக நீண்டகாலமாக ஒரு  நெருக்கமான உறவு இருந்துகொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அந்தவகையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்காக   இந்திய உயர்ஸ்தானிகர் மூலமாக கிடைக்கின்ற கல்வி, கலை, கலாசார, சுகாதாரம், அபிவிருத்தி திட்டங்கள் என்பவற்றுக்கு  நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

இலங்கை வாழ் இந்திய சமூகத்தின் மேலும்  அபிலாசைகள் நிறைவேறும் வகையில்   இந்திய அரசு  எங்களுக்கு  16  ஆயிரம் வீடுகளை வழங்கியுள்ளது. ஆகவே  இது போன்ற சேவைகள் அனைத்தும் எந்தவித தங்குதடைகளுமின்றி  மீண்டும் தொடரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா


Add new comment

Or log in with...