அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

- பெப்ரவரி 9க்கு ஒத்திவைப்பு

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது, பொலிசார் எம் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் உள்ளிட்ட  ஐவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு  நேற்றுமுன்தினம்  (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டது.  இதன்போது வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். 

இதன் பின்னர் அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.  குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்தனர். 

இந்து மயானத்தில் பயங்கரவாதியை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் அவ்விடம் சென்று புதைக்கப்பட்ட அந்த உடற்பாகத்தை தோண்டி எடுத்குமாறு மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தவேளை பொலிசார் எங்களை மிக மோசமாக பலமாக தாக்கினர். 

அந்த அடிப்படையில் செல்வி மனோகரன், அனோஜன், சுசிலா, றொஸ்மன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மீதும் என்னையும் சேர்த்து மொத்தமாக 5 பேருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்குதல் செய்தனர் என்றார்.

(கல்லடி குறூப் நிருபர்) 

 

 


Add new comment

Or log in with...