கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விற்பனைக்கோ, குத்தகைக்கோ கிடையாது

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விற்பனைக்கோ, குத்தகைக்கோ கிடையாது-Colombo Port's Eastern Terminal Won't be Aold or Leased-President Gotabaya Rajapaksa

- ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு
- முதலீடுகள், நாட்டின் இறைமை பாதுகாக்கப்படும்
- முதலீட்டின் பின்னரான நிர்வாகம் அதிகாரசபையிடம்
- முன்மொழிவுகளை சமர்ப்பிக்க தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என்று துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்க கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது. விற்பனைக்கு பின்னர் ஜப்பானில் இருந்து கடன் பெறுவதும் கடன் தொகையை கொண்டு நிர்மாணப் பணிகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாடிய பின்னர், முனையத்தின் 51% உரிமையையும் கட்டுப்பாட்டையும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் தக்க வைத்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் இறைமை அல்லது சுதந்திரத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விற்கவோ, குத்தகைக்கோ கிடையாது-Colombo Port's Eastern Terminal Won't be Aold or Leased-President Gotabaya Rajapaksa

தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன அரசாங்கத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. தான் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சீனாவுடன் கலந்தாலோசித்து துறைமுக கடல் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பிராந்திய புவியரசியல் காரணிகள், நாட்டின் இறைமை, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்த பின்னரே கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டமிடப்பட்டது என்று ஜனாதிபதி கூறினார். முதலீட்டு திட்டத்தின் கீழ் கிழக்கு முனையம் நிலையான அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும் என்று ஜனாதிபதி விளக்கினார். கிழக்கு முனைய மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்தியா 66% பங்களிப்பு செய்கிறது. 9% பங்களாதேஷுக்கும் மீதமுள்ளவை வேறு சில நாடுகளுக்கும் செய்யப்படும் மீள் ஏற்றுமதியாகும்.

51% உரிமை இலங்கை அரசாங்கத்திற்கும், மீதமுள்ள 49% இந்தியாவின் “அதானி“ நிறுவனத்திற்கும் ஏனைய தரப்பினருக்கும் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய வகையில் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்

இது குறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறிய ஜனாதிபதி அவர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் இணைந்து இந்த திட்டம் குறித்து தங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு தொழிற் சங்க தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

துறைமுக மேற்கு முனையத்தின் செயல்பாட்டை துறைமுக அதிகாரசபையிடம் ஒப்படைக்க விரும்புவதாக கூறிய ஜனாதிபதி, துறைமுக அபிவிருத்திக்கான திட்டங்களை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தை தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை விரிவாக்குவது ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மத்தளை விமான நிலையம் மற்றும் நுரைச்சோலை மின் நிலையத்தை விற்பதற்கு கடந்த அரசாங்கம் வகுத்திருந்த திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முற்றிலுமாக நிறுத்தியுள்ளதாக பெசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, துறைமுக அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகார சபை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


Add new comment

Or log in with...