தனது முன்னாள் அதிகாரிக்கு மன்னிப்பு வழங்கினார் டிரம்ப்

எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவினருக்கு பொய் கூறியதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தனது முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிலைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு அளித்துள்ளார்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த கருணைச் செயல் அவருக்கு வழங்கும் “பெரும் கௌரவம்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையின்போது, மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் பொய் கூறியதாக பிலைன் ஒப்புக்கொண்டார். அந்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

டிரம்ப் ஜனாதிபதி பொறுப்பு வகித்த 4 ஆண்டுகளில் உயர் பதவியில் இருந்த ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

டிரம்ப் நிர்வாகத்தின் கடைசி சில வாரங்களில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதற்கு ஜனநாயகக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிலைனுக்கு மன்னிப்பு வழங்கியதால் உண்மையை அழித்துவிட முடியாது என பாராளுமன்றத்தின் புலனாய்வுக் குழுத் தலைவர் அடம் ஷ்கிப் கூறினார்.


Add new comment

Or log in with...