கோப்பி அருந்தினால் முகப்பருவா?

கோப்பி அருந்தினால் முகப்பருவா?-Drinking Coffee Pimples

புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முகப்பருவே முதல் எதிரியாக அமைந்து விடுகிறது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் அழுக்கு முகத்தில் படர்வது முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன.

மாசு மட்டுமின்றி உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. பால் பொருட்கள், பான் வகைகள், காரமான மற்றும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள் உட்பட பல வகையான உணவுகளை சாப்பிடுவதாலும் முகப்பருக்கள் தோன்றும். கோப்பியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள், “ஹோமோன்களின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருக்கள் தோன்றுவதற்கு அடிப்படை காரணியாக அமைகின்றன.

கோப்பியை அதிகமாக பருகும் பழக்கம் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ளது. கோப்பியில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹோமோன்களை தூண்டிவிடுகிறது. அவை தேவையற்ற கலோரிகளை உடலில் சேர்வதற்கு வழிவகுப்பதோடு முகப்பருக்கள் தோன்றுவதற்கும் காரணமாகிவிடுகின்றன.

இதனைத் தடுப்பதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு அதிகம் கொண்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. காய்கறிகள், பழங்களை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவும்” என்று கூறுகிறார்கள்.

அதிகமான அளவு கோப்பி பருகுவதும், போதுமான அளவு உணவு உட்கொள்ளாததும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அப்போது உடலில் உள்ள அமிலத்தின் அளவு அதிகமாகிவிடும். அதாவது உடலில் அமிலத்தின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறதோ அதற்கேற்ப நீரிழப்பும் ஏற்படும். கோப்பியை அதிகமாக உட்கொள்ளும்போது அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் உடலில் இருந்து வெளியேறும். இதன் விளைவாகத்தான் நீரிழப்பு ஏற்படுகிறது.

அத்துடன் அதிக கோப்பி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும். அப்போது இயல்பாகவே உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


Add new comment

Or log in with...