50 வருடம் புனரமைக்கப்படாத மட்டுகலை தோட்ட வீதியின் அபிவிருத்தி பணி ஆரம்பம் | தினகரன்

50 வருடம் புனரமைக்கப்படாத மட்டுகலை தோட்ட வீதியின் அபிவிருத்தி பணி ஆரம்பம்

தலவாக்கலை மட்டுகலை தோட்டத்திலிருந்து ரதல்ல வரையிலான நான்கு கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான வீதி சுமார் 50 வருடகாலமாக புனரமைக்கப்படாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இதுதொடர்பாக நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.நாகராஜ் தலவாக்கலை லிந்துலை நகரசபை உறுப்பினர் பசான் அத்ததுடுகவ ஆகிய இருவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சீ.பி.ரத்தநாயக்க கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நூறு மில்லியன் ரூபா செலவில் காபட் பாதையாக புனரமைக்கபடவுள்ளது.

இதற்கான. ஆரம்பகட்ட பணிகள் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான கே.சிவஞானம் ஏ. நாகராஜ் கலந்துகொண்டு நேற்று பணிகள் ஆரம்பித்துவைத்தனர்.

இதன் போது மக்கள் மத்தியில் ஏ.நாகராஜ் தெரிவிக்கையில் ஜனாதிபதி ஊடாக இப்பாதை சீர்செய்யப்படுகின்றது.

இதற்கு அமைச்சர் சீ.பி ரத்தநாயக்க அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார். கடந்த 50 வருடங்களாக இப்பிரதேச மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இங்குள்ள விவசாயிகளால் உற்பத்திசெய்யப்படும் மரக்கறி வகைகளை கூட நகரங்களுக்கு கொண்டுசெல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்களை எதிர்கொண்டார்கள். சில அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குறுதி வழங்குவது கடமையாகவுள்ளது.

ஆனால் மக்களின் அபிவிருத்தி தொடர்பான விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை. இப்பாதையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செய்யவிடாமல் தடுப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.

அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. எமது அபிவிருத்தியை பற்றி சிந்திக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசியல் ரீதியாக சிந்தித்தால் நாம் அபிவிருத்தி அடையாத கூட்டமாகவே இருப்போம் என தெரிவித்தார்.

ஹற்றன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...