முறையான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மாணவர்கள் சிரமம்

அதிபர்கள் குற்றச்சாட்டு

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதியின்மையால் பாடசாலைக்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிபர்கள் வலய கல்வி பணிமனைக்கும் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி பாடசாலைகள் 6 ஆம் ஆண்டு முதல் 13 வரை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் மலையக பகுதிகளிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது.

இது தொடர்பாக கொத்மலை வலய கல்வி பணிமனை அதிபர்கள் ஊடாக விபரங்களை பெற்றுக் கொண்டதற்கு அமைய அதிபர்கள் தங்களுடைய பாடசாலைக்கு மாணவர்கள் வருவதில் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்குவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

கடந்த 24.11.2020 அன்று பாடசாலைகளில் இருந்து மாணவர்களின் வருகை தொடர்பாக பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் 28 மாணவர்கள் இருக்கின்றனர் அவர்களில் ஒருவர்கூட பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது தெரியவந்த விடயம் போக்குவரத்து வசதி இன்மையால் மாணவர்கள் வரவில்லை.

இந்த விடயம் தொடர்பாக கொத்மலை வலய கல்வி பணிமனையின் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,

போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக பல பாடசாலை அதிபர்கள் எங்களுக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார்கள்.நாங்கள் இது தொடர்பாக பூண்டுலோயா அரச போக்குவரத்து சபையின் முகாமையாளருடன் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவர் எங்களுக்கு வழங்கிய பதில் திருப்திகரமாக இல்லை. நீங்கள் ஒரு புதிய பேருந்தை வாங்கி தாருங்கள் அதனை நாங்கள் சேவையில் ஈடுபடுத்துகின்றோம் என்று அவர் எங்களிடம் கூறுகின்றார்.

இது ஏற்றுக் கொள்ளக்கூடிய பதில் இல்லை.கல்வி அமைச்சு பாடசாலைகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறான ஒரு நிலையில் நாங்கள் பாடசாலைகளை திறந்து செயற்பட்டாலும் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற போக்குவரத்து பிரச்சினைக்கு எங்களால் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது.

மேலும் அநேகமாக தமிழ் மாணவர்களே இந்த பிரச்சினையை எதிர்நோக்குகின்றார்கள். பூண்டுலோயா போக்குவரத்து சபை முகாமையாளரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை.எனவே இது தொடர்பாக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பூண்டுலோயா அரச பேருந்து நிலையத்தின் முகாமையாளர் கேட்ட பொழுது.

எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தலின்படி ஆசனங்களுக்கு மாத்திரமே பயணிகளை ஏற்ற முடியும். ஆசனங்கள் முழுமையான பின்பு மேலதிகமாக பயணிகளை ஏற்றிக் கொள்ள முடியாது.எனவே இவ்வாறான ஒரு நிலையில் சில வேளைகளில் மாணவர்களை ஏற்றிக் கொள்ள முடியாத ஒரு நிலைமை ஏற்படலாம்.அதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.இருந்தாலும் நாங்கள் வழமையைவிட இரண்டு பேருந்துகள் அதிகமாகவே இயக்குகின்றோம்.இதுவே நிலைமை என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படாவிட்டால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவது என்பது கேள்விக்குறியே.நேற்றுமுன்திளம் அநேகமான பாடசாலைகளில் 100 வீதமான வருகை பதிவு செய்யப்படவில்லை என்பதே தகவல்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

நுவரெலியா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...