மூதூர் நாவலடி கிராமத்தில் தொடர்ந்தும் யானைகள் அட்டகாசம்

மக்கள் கவலை

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 'நாவலடி" கிராமத்தில் இரவுநேரங்களில் காட்டுயானைகள் உட்புகுந்து தங்களது வீடுகளையும் , கடைகள்,தோட்டப் பயிரினங்களையும் துவசம் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் வீட்டுத்தோட்டத்தில் செய்யப்பட்ட 14 தென்னை மரங்களையும் ஏனைய வீடுகளுக்கு அருகில் உள்ள சுமார் 30 தென்னைமரங்களையும் அடியோடு பிடுங்கி துவம்சம் செய்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் சுமார் 245 தமிழ், சிங்கள குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன .

குறிப்பாக இப்பிரதேசத்தில் 5 ,6 யானைகள் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து தாம் செய்கின்ற பயிர்களையும் மற்றும் தமது கடைகளையும் வீடுகளையும் உடைத்துவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரதேசத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக யானை வேலி கூட அமைத்து தரப்படவில்லை எனவும் வீட்டிற்கு முன்னால் இரவில் நடமாடும் யானைகள் காலையில் காட்டை நோக்கிப் போவதாகவும் மீண்டும் மாலையில் பிரதேசத்துக்குள் வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து யானையைக் களைப்பதாகவும் இதனால் இது தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் .

குறிப்பாக இப்பிரதேசத்தில் பனைமரங்கள் பழுத்தால் பனம்பழங்கள் சாப்பிடுவதற்காக யானைகள் வருவது வழக்கம் என்றும் ஏனைய நாட்களில் இந்த யானைகள் இரைதேடுவதற்காக வீட்டு பகுதிகளுக்கு வருவது வழக்கம் எனவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பல அதிகாரிகளிடம் முறையிட்டும் இதற்கான நிரந்தரத் தீர்வினை இதுவரைக்கும் பெற்றுத்தரவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்


Add new comment

Or log in with...