கொழும்பு, தம்புள்ளை அணிகளுக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்! | தினகரன்

கொழும்பு, தம்புள்ளை அணிகளுக்கு புதிய பயிற்றுவிப்பாளர்கள்!

லங்கா ப்ரீமியர் லீக் அணிகளான கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகள் தலைமை பயிற்றுவிப்பாளர்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் ஜோன் லிவிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த மாதம் நடைபெற்ற வீரர்கள் தெரிவில், சிறந்த அணியை தெரிவுசெய்திருந்தார்.

குறிப்பாக இலங்கை அணியின் அதிரடி சகலதுறை வீரர் தசுன் ஷானக உட்பட, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் இளம் வீரர்களான சச்சிந்து கொலம்பகே, கவிந்து நதீஷன், டில்ஷான் மதுசங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோரை அணியில் இணைத்திருந்தார்.

தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியின் புதிய உரிமையாளர்கள் வருகைத்தந்த பின்னர், ஜோன் லிவிஸ் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொரு இங்கிலாந்து நாட்டவரான ஓவியஸ் ஷா தலைமை பயிற்றுவிப்பாளராக இணைக்கப்பட்டுள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக்கின் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த டேவ் வட்மோர், தன்னுடைய பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த தலைமை பயிற்றுவிப்பாளரான டேவ் வட்மோர், தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை வரமுடியாது என அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் கபீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடும் ஏனைய அணிகளான கண்டி டஸ்கர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளின் தலைமை பயிற்றுவிப்பாளர்களாக முறையே ஹஷான் திலகரட்ன, திலின கண்டம்பி மற்றும் மொஹீன் கான் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 16ம் திகதிவரை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...