மாணவர்களுக்கான கல்விக் கதவை தொடர்ந்தும் மூடி வைத்திருப்பது தவறு

இலங்கையிலும் கொரோனா தாக்கம் கற்றல், கற்பித்தல் விடயத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகள் இம்மாதம்23 ஆம் திகதி ஆரம்பமாகும் எனஅறிவிக்கப்பட்டிருக்கின்றது.

புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.உயரதரப் பரீட்சை ஆகியவை எவ்வித பாதிப்புகளும் இன்றி நடந்து முடிந்து விட்டமை வரவேற்புக்குரிய விடயமாகும். அதேபோன்று எதிர்வரும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையும் தடங்கல் இன்றி நடந்த முடியும் என்பதே நம்பிக்கை ஆகும்.

நாட்டின் எதிர்காலம் மாணாக்கர் கைகளிலே தங்கியுள்ளது. இந்நிலையில் நாளைய தலைமுறையினரின் கல்வி பற்றி இன்று சிந்திக்க வேண்டியது அவசியம். பாடசாலைகளை தொடர்ந்து பூட்டி வைத்து மாணவர்களின் கல்வியை பாழடிக்க முடியாது. எனவே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதென்பது வரவேற்புக்குரியதாகும்.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறை விடயங்களை மாணவர்கள் முழுமையாக கடைப்பிடித்தொழுகுவதில் ஒவ்வொருவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இன்று அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியிருப்பது கொரோனா பற்றிய கதைகள்தான்.பாடசாலை மாணவர்கள் பேசுவதும், அச்சப்படுவதும் இந்த கொடிய நோயைப்பற்றித்தான். ஆனால் மிகைப்படுப்பட்ட தகவல்களால்தான் சற்று அதீதமான அச்சம் நிலவுகின்றதென்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

பாடசாலைகள் நீண்ட நாட்களாக மூடிக் கிடப்பதால் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள பாதகமான விளைவுகளையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம். மாணவர்கள் பொழுதுபோக்குக்கு கைப்பேசிகளையே அதிகம் இன்று பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்கள் ஏட்டிக்குப்போட்டியாக வெளியிடும் செய்திகளில் அநேகம் கொரோனா தகவல்ககள் ஆகும். இச்செய்திகளையும் அதிகளவு வாசிக்கும் மாணவர்களின் ஆழ்மனநிலை எவ்வாறிருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

கொரோனா காரணமாக இலங்கையில் சுமார் 45 இலட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குகின்றனர். தன்னார்வ நிறுவனமான ‘சேவ்த சில்ரன்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகில் 97 இலட்சம் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை முற்றாக நிறுத்தியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்நிலையில் சென்றால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிக்கும் . அதன் பின்னர் இன்றைய மாணவ சந்ததியின் கல்வி என்னவாகுமென்பதையும் சிந்திக்க வேண்டும்.

பாடசாலைக் கல்வியை விட பெற்றோர் ரியூசன் கல்விக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இன்று அதுவும் கிடையாது.

ரியூசன் கல்விக்கு பதிலாக இணையவழிக் கல்வி கற்பிக்க முயன்ற போதும் அது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லையென்றே கூற வேண்டும். குறிப்பாக வறிய மாணவர்களுக்கு இக்கல்வியால் பயன் ஏற்படவில்லை.

மாணவர் மன்றங்களோ, இளைஞர் பாராளுமன்றமோ, இல்ல விளையாட்டுப் போட்டிகளோ, கலாசார சமாதான பாசறைகளோ, மொழித்தினப் போட்டிகளோ இன்றில்லை. யாவற்றையும் இழந்தவர்களாக மாணவர்கள் காணப்படுகின்றனர்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சுற்றாடல் துப்புரவாக்கமும் தொற்றுநீக்கமும் இடம்பெற வேண்டும். இதற்குரிய பங்களிப்பு முதலில் பெற்றோர் மத்தியில் உருவாக வேண்டும். ஊதிப் பெருப்பிக்கப்பட்ட செய்திகளும் முகநூலில் வரும் தகவல்களும் பெற்றோரை நிலைகுலைய வைத்துள்ள நிலையில் அவர்களின் உதவிதான் இங்கு முக்கியமானது.

பெற்றோர், அதிபர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் எனும் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு கிராமசேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மாநகரசபையினர், இராணுவத்தினர் கண்காணிப்போடு செயலாற்றுவதன் மூலம் கொரோனா எனும் கொடிய நோய் அச்சத்திலிருந்து மாணவர்களை விடுவித்து பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே பிரதானம்.

கல்விச் சூழலுக்கு திரும்பி வரும் மாணவர்களின் மனதை ஆற்றுப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர் கரங்களிலே தங்கியுள்ளது .

மெல்லக் கற்கும் மாணவர்களை கணிதம், தாய்மொழி உட்பட

அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைய வைக்கும் பொறுப்பும்

பாடசாலையின் கைகளிலே தங்கியுள்ளதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

 

-எஸ்.சிராஜுதீன்
நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்

 


Add new comment

Or log in with...