தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை கடமையானதா?

தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை கடமையானதா?-Tahiyatul Masjid-Islam

'ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் நிறைவேற்றும் தொழுகையே 'தஹிய்யதுல் மஸ்ஜித்' தொழுகையாகும். இது ஒரு ஸுன்னத்தான தொழுகை என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறியுள்ள அதேநேரம் இதுவும் கடமையான தொழுகை போன்று கரிசனையோடு நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகை எனவும் சிலர் கூறியுள்ளனர்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவர் பள்ளிவாசலினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்' எனக் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் - புஹாரி:116 முஸ்லிம்:714

இந்த நபிமொழியின்படி பள்ளிவாசலில் பிரவேசித்ததும் உட்கார முன்னர் இத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள், 'தஹிய்யதுல் மஸ்ஜித் விரும்பத்தக்க தொழுகை என்ற கருத்தில் உலமாக்கள் ஏகோபித்த கருத்தில் இருக்கிறார்கள். அபூ கதாதா (ரலி) அவர்களுடன் சம்பந்தப்படுத்தி தெளிவாக வருகின்ற நபிமொழியின் படி காரணமில்லாமல் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழாமல் உட்காருவதானது வெறுக்கத்தக்க செயல்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், 'பத்வா (மார்க்கத்தீர்ப்பு) வழங்கக்கூடிய உலமாக்கள் இவ்விடயத்தில் வருகின்ற ஏவலானது சுன்னத்தை தெளிவுபடுத்துவதாகும் என்ற கருத்தில் ஏகோபித்த நிலைப்பாட்டில் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். வெளிப்படையாக சட்டம் கூறக்கூடிய சாரராரைத் தொட்டு இமாம் இப்னு பதால் (ரஹ்) அவர்கள் இதனை வாஜிபான தொழுகை என கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் - பத்ஹுல் பாரி: 1/538, 539)

இதேவேளை 'பத்வா அல் லஜ்னதுத் தாயிமா' என்ற நூலில் இத்தொழுகையின் சட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 'நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்' எனக் குறிப்பிட்டிருக்கும் பொதுவான கட்டளைக்கு அமைய, எந்த நேரமாக இருந்தாலும் பள்ளிவாசலினுள் நுழைகின்ற ஒவ்வொருவர் மீதும் இத்தொழுகை சுன்னத்தான ஒன்றாகும்.

இவ்வாறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இத்தொழுகை தொடர்பில் விபரித்துள்ளார்கள். அதேநேரம் இன்னும் சில இஸ்லாமிய அறிஞர்கள் இத்தொழுகை வாஜிபான ஒன்று எனவும் கூறியுள்ளார்கள்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, 'ஒரு மனிதர் வந்து தொழாமல் உட்கார்ந்து விடுகிறார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போதே அவரை எழும்பி தொழுமாறு கூறினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு இத்தொழுகை கடமையான ஒன்று என குறிப்பிடுகின்றார்கள். அதேபோன்று இது சுன்னத்தான தொழுகைதான் என்று கூறுபவர்கள், நபி (ஸல்) அவர்கள் தான் மரணிக்கின்ற காலம் வரைக்கும் செய்த ஒவ்வொரு குத்பா உரையின் போதும் 'தஹிய்யதுல் மஸ்ஜித்' தொழுகையை தொழாதவர்களாக மிம்பரிலெல்லாம் இருந்துள்ளார்கள் என்ற ஒரு செய்தியையும் முன் வைக்கின்றார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, 'ஒரு மனிதர் முன்னால் வந்து உட்கார்ந்து விடுகிறார்.

மற்றொருவர் வெட்கத்தினால் பின்னால் உட்காருகிறார். இன்னுமொருவர் அவ்விடத்திற்கு வராது செல்கிறார். இது நீண்ட செய்தியாக இருந்தாலும் இந்த மூன்று மனிதர்களும் உட்கார முன் தொழுதார்கள் என்பதற்கு எந்த பதிவும் இல்லை. இவர்களை நபி (ஸல்) அவர்கள் தொழச்சொன்னதாகவும் பதிவுகளைக் காணக்கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

இவ்வாறான சூழலில் இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்)அவர்கள் 'தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை கடமையானதுதான் என்று சொல்லப்படக்கூடிய கருத்து வலுவான ஒன்றுதான். என்றாலும் நெருக்கமான கருத்து இத்தொழுகையானது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இது பற்றிய சரியான அறிவு அல்லாஹ்விடத்திலே இருக்கிறது.' என்றுள்ளார்கள்.

ஆகவே இத்தொழுகை தொடர்பில் வந்துள்ள செய்திகளை ஒட்டுமொத்தமாக எடுத்து நோக்கும் போது இத்தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடாது என்பது ​தெளிவாகின்றது. அதனால் ஏனைய தொழுகைகளைப் போன்று இத்தொழுகையையும் கரிசனையோடு நிறைவேற்றுவோம்.


Add new comment

Or log in with...