விவாதத்தை 21 நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானம்

2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இதனை 19 நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கப்பட விருப்பதுடன், நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 05 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அதன் பின்னர் நவம்பர் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நிறைவுபெறும். அன்றையதினம் பிற்பகல் 05 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (11) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது சபை அமர்வுகள் தினமும் 9.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.30 மணிவரை முன்னெடுக்கப்படும். நவம்பர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்படவிருப்பதுடன் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.00 மணிவரையும் நேரம் ஒதுக்கப்படும்.


Add new comment

Or log in with...