தேநீரால் வழக்கிழந்த வடக்கின் பழந்தண்ணீர்..! | தினகரன்

தேநீரால் வழக்கிழந்த வடக்கின் பழந்தண்ணீர்..!

'எங்களுக்குப் பழந்தண்ணி என்டாலே என்னெண்டு தெரி யாது' என்கின்றனர் இன்றைய விவசாயிகள். 'முந்தின காலத்தில சோறு நிறைய சமைச்சு அத இரவு வைச்சு காலையில குழைச்சுச் சாப்பிடுவினம்.

இப்ப நாங்கள் மதியத்துக்கு அளவாச் சமைச்சு மதியமே சாப்பிட்டிட்டு இரவு புட்டுத்தானே சாப்பிடுறம். இரவில காச்சின சோறு கிடந்தாலே சாப்பிடுறேல்ல. ஆடு மாட்டுக்குத் தான் வைக்கிறம். காலையில தோட்ட வேலைக்கு வரேக்க பாணோ  புட்டோ சாப்பிட்டு விட்டு வருவம். காலையில பத்து மணிக்கும், பின்னேரம் நாலு மணிக்கும் பிளேன் ரீ போட்டுக் குடிப்பம்' என்கின்றனர் வடபகுதியின் பெரும்பாலான விவசாயிகள்.

அன்று பழந்தண்ணீரிலும் மோர்த் தண்ணீரிலும் தங்கியிருந்தவர்கள் இன்று தேநீரின்றி இயங்கமுடியாது என்ற அளவிற்கு தேநீர் வடபகுதி மக்களுடன் ஒன்றிவிட்டது. ஆனால் இன்றும் முதியோர்கள் வசிக்கும் ஒரு சில வீடுகளில் காலை நீராகாரமாகப் பழந்தண்ணீர் அருந்தும் வழக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

இருப்பினும் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வந்த பழக்கவழக்கங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டியிருக்கின்றது.

'ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்' என்கிறது அகத்தியரின் சித்த மருத்துவப் பாடல்.

இரவுவேளை சோறு சாப்பிட்ட பின் பானையில் எஞ்சியிருக்கும் சோற்றில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் நீரில் ஊறிப் போயிருக்கும் சோற்றிற்குள் உப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்ப் பூத் துருவல் என்பவற்றைச் சேர்த்து கலக்கி குடிப்பார்கள். அதுதான் பழந்தண்ணீர். இது வடபகுதி மக்களிடையே பரிமாறப்பட்டு வந்த நீராகாரமாகும். இன்று வீட்டுக்கு வருபவர்களை

தேநீரா? குளிர்பானமா? என்று கேட்குமளவிற்கு தேநீரின் ஆதிக்கம் வடபகுதி மக்களிடையே நிலைபெற்றுவிட்டது. காலைப் பொழுதின் சுவையான ஆரம்பத்திற்கு ஒரு கோப்பைத் தேநீர்.

மாலைநேரச் சோம்பலுக்கு ஒரு கோப்பைத் தேநீர். தலைவல, காய்ச்சலுக்கு ஒரு கோப்பைத் தேநீர்; விருந்தினர்களுக்கு ஒரு கோப்பைத் தேநீர்; அலுவலக இடைவெளியில் ஒரு கோப்பைத் தேநீர்; இரவுநேர விழிப்புக்கு ஒரு கோப்பைத் தேநீர்; பரீட்சை நேரத்தில் சுறுசுறுப்பிற்கு அம்மா தரும் ஒரு கோப்பைத் தேநீர் என இஞ்சி, கறுவா, ஏலக்காய் போன்ற வாசனைத் திரவியங்களுடன் பரிமாறப்பட்டுவரும் தேநீருடன் எமக்குள்ள தொடர்பு தவிர்க்க முடியாததே.

ஆனாலும் வடபகுதி மக்களிடையே தேநீர் அருந்தும் பழக்கம் ஏற்படுவதற்கு முன்னர் அவர்கள் எதனை அருந்தினர்?.
ஆரம்ப காலங்களில் வடபகுதி மக்களின் பிரதான தொழில்களாக விவசாயமும் சிறு கைத்தொழில்களும் காணப்பட்டன. குறிப்பாக கிராமங்களில் விவசாயத் தொழிலின் நிமித்தம் காலையில் பழந்தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழந்தண்ணீர் என்பது இன்றைய இளம்சமுதாயத்தினர் மத்தியில் கேள்விப்படாத அல்லது அருந்தியிராத பானம்.

அப்படியென்றால் என்ன எனக் கேட்குமளவிற்குத் தமிழர்களின் பழக்கவழக்கங்கள் அருகிவருகின்றன. அந்தக் காலகட்டத்தில் பழந்தண்ணீருடன் மோர், தேசிக்காய்த் தண்ணீர் மற்றும் பதநீர் போன்ற பானங்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை அருந்தப்பட்டுவந்துள்ளன.

பகலிலே வீட்டுக்கு வருபவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் மோரைக் கொடுக்கும் வழக்கமும் சில இடங்களில் மதியவேளையில் சோறுவடித்த கஞ்சிக்குள் உப்பும் தேங்காய்த் துருவலும் சேர்த்து கொடுக்கும் வழக்கமும் இருந்திருக்கிறன.

இவை சுவையானவையாக இருந்ததுடன் மக்களின் உடலுக்கு வலுச் சேர்த்ததையும் மறுக்கமுடியாது. 'காலையில் எழுந்து கால் முட்டி பதநீர் குடிக்காதவன் கமக்காரன் அல்ல' என்று வடபகுதியில் நிலவிய முதுமொழிக்கிணங்க பதநீரும் அருந்தப்பட்டு வந்துள்ளதை இன்றும் கிராமங்களில் சொல்லிக் காட்டுவார்கள்.

காலையில் தொழிலுக்குச் செல்லும்போது கயிறுகட்டிய முட்டிகளில் பழந்தண்ணீர் கொண்டுசெல்வார்கள். குடிப்பதற்குப் பாத்திரமாக சிரட்டைகளைப் பயன்படுத்தினார்கள். இன்றைய காலத்தில் இருப்பது போன்று சில்வர் பாத்திரங்கள் அன்று வழக்கத்தில் இருக்கவில்லை. அநேகமானோர் சிரட்டைகளையே அருந்துகலங்களாகப் பயன்படுத்தியதுடன்  வீடுகளில் பித்தளை மூக்குப் பேணிகளும் இருந்தன.

இன்று இப்பொருட்களைப் பயன்படுத்துவோரை அலட்சியமாகப் பார்க்கும் தன்மையே எஞ்சியுள்ளது. இவ்வாறிருக்க வடபகுதி மக்களின் அன்றாட பானமாகத் தேநீர் எவ்வாறு மாறியது என்பதை அக்காலக் காட்சியமைப்புடன் இன்றும் சுவைபட விபரிக்கின்றனர் சில முதியவர்கள்.

'சனநெருக்கம் உள்ள பகுதிகளில் கிராமத் தலைவரின் உதவியுடன் ஒரு வீட்டில் காலையில் பெரிய கிடாரத்தில் நீர் கொதிக்கவைத்து அதனுள் தேயில, சீனி சேர்த்துத் தேநீர் தயாரிப்பர். அந்த வீட்டுக்காரர் சேமக்கலத்திலோ தகரத்திலோ சத்தம் எழுப்புவார்.

சத்தம் கேட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கயிறு கட்டிய செம்போ, முட்டியோ, சட்டியோ கொண்டுவருவர். இலவசமாகத் தேநீரை வாங்கி சிரட்டைகளிலோ பேணிகளிலோ குடிப்பர். வர முடியாதவர்களுக்கு சீனியும் தேயிலையும் கொடுக்கப்பட்டது. பிறகு தேயிலையும் சீனியும் விற்பனைப் பண்டங்களாக மாறின. இவ்வாறே வடபகுதி மக்களின் அன்றாட பானமாகத் தேநீர் மாறியது' என்கின்றனர் அவர்கள்.

ப. லக்‌ஷனா
ஊடகக் கற்கைகள் துறை
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

 


Add new comment

Or log in with...