ரியாஜ் பதியுதீன் கைதை தடுக்கும் ரிட் மனு தள்ளுபடி

ரியாஜ் பதியுதீன் கைதை தடுக்கும் ரிட் மனு தள்ளுபடி-Riayj Bathiudeen Writ Petition Rejected by Court of Appeal

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த ரிட் மனு நேற்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றில், நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்ட மாஅதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்னவும், இடையீட்டு மனுதாரரான கருதினால் மெல்கம் ரஞ்சித் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ஜயவர்தன ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மனுவின் முடிவை இன்று வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், இன்று (21) குறித்த மனுவை தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியதாக, குற்றம் சாட்டப்பட்ட ரியாஜ் பதியுதீன், கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 5 மாதங்களின் பின் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது விடுதலையை எதிர்த்து அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் கையெழுத்திட்ட கடிதமொன்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் CID அதிகாரிகளை விசாரணை செய்த சட்ட மாஅதிபர், இவ்விடயம் தொடர்பில் CIDயினர் உரிய விதிமுறைகளை பேணவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்த்ககது.

இதனைத் தொடர்ந்து ரியாஜை விடுதலை செய்தமை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி விசாரணைகளை முன்னெடுக்கும் இரு பொலிஸ் குழுக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய 07 விசேட அம்சங்கள் தொடர்பில், இரு குழுக்களும் விசாரணை நடத்துவதோடு உள்ளக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Add new comment

Or log in with...