பச்சை புற்தரையாக மாற்றித் தருவேன் | தினகரன்


பச்சை புற்தரையாக மாற்றித் தருவேன்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டி சில்வா

மருதமுனையில் அமைந்துள்ள மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தை உதைபந்தாட்ட வீரர்கள் விளையாடுவதற்கு பொருத்தமான பச்சைப்பசேல் கொண்ட புற்தரையாக விரைவில் மாற்றித் தருவதற்கு வாக்குறுதி அளிக்கிறேன் என்று இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாபை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சங்கத்தின் தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான வை.கே. றஹ்மான் தலைமையில் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் கடந்த (04ம் திகதி) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,

நான் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் பொறுப்பை பொறுப்பேற்கும் போது அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட துறை ஒரு வீழ்ச்சி நிலையில் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இந்த மாவட்டத்திற்கு உபதலைவர் ஒருவரை நியமித்து இருக்கின்றோம். இவர் ஊடாக மாவட்டத்தின் உதைபந்தாட்ட துறையை வளர்ச்சி அடையச் செய்யலாம் என எதிர்பார்க்கின்றேன். இந்தப் பிரதேசத்தைப் பொறுத்த அளவில் இரண்டு மைதானங்கள் இருக்கின்றன. ஒன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் மற்றையது மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் ஆகும்.

இவற்றில் மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் எங்களது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நேரடி பராமரிப்பில் உள்ள மைதானம் ஆகும். இதனால் இந்த மைதானத்தை புனரமைப்பு செய்வது எமக்கு இலகுவாக இருக்கும். மிக விரைவில் இந்த மைதானத்தை புற்கள் நிரம்பிய விளையாடுவதற்கு பொருத்தமான மைதானமாக செப்பனிட்டு தருவேன். என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதே போன்று மாவட்டத்தின் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்வதற்கான 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்ய உள்ளோம். இப்போதைக்கு எனக்கு புதிய தலைவர் ஒருவர் இந்தப் பகுதிக்கு கிடைத்திருப்பதால் இவற்றை இலகுவாக மேற்கொள்ள முடியும் என நம்புகிறேன். புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அப்துல் மனாப் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

இந்த நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உயர் பீட உறுப்பினர்கள், நடுவர் சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் நிர்வாக உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்


Add new comment

Or log in with...