ரிஷாட் பதியுதீனை சட்டப்படி கைது செய்யவும் | தினகரன்

ரிஷாட் பதியுதீனை சட்டப்படி கைது செய்யவும்

ரிஷாட் பதியுதீனை சட்டப்படி கைது செய்யவும்-AG Directs to Arrest Rishad Bathiudeen Over 2009 Election Law Violations

- ரிஷாட்டை கைது செய்ய பிடியாணை தேவையில்லை என நீதவான் நிராகரிப்பு

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை சட்டத்திற்கு அமைய கைது செய்யுமாறு, சட்ட மாஅதிபரினால் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கு பிடியாணை அவசியமில்லை என, கொழும்பு கோட்டை நீதவான் இன்று (13) அறிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பெறுமாறு, சட்டமா அதிபர் இன்று (13) பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய செயற்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் (CID), கொழும்பு கோட்டை நீதவானிடம் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்ததைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பிலான கைது நடவடிக்கைக்கு பிடியாணை அவசியமில்லை என, இன்று அறிவித்திருந்தார்.

இதன்போது, பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் நபர் ஒருவரை கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என, CIDயினருக்கு நீதவான் அறிவித்ததோடு, இது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 27இல் எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களை வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்டுத்திக் கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சொந்தமான ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவரை கைது செய்ய சட்டமா அதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், அத்திட்டத்தின் முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், அப்போதைய  நிதியமைச்சின் ஒப்புதலுடனும், தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடனும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இந்தப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...