உக்ரைன் இராணுவ விமானம் விபத்து; 22 பேர் பலி

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து; 22 பேர் பலி-Ukraine Plane Crash-22 Killed Out of 27-3 Missing

- 27 பேரில் 2 பேர் காயம்; 3 பேரை காணவில்லை

உக்ரைன் நாட்டு இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அன்டோனோவ் -26 ( Antonov-26) எனும் குறித்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளையில், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் எனும் நகரிற்கு அருகே திடீரென கீழே வீழ்ந்து நொருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானம் கார்கிவ் விமானப்படை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெடேட் உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேளையில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது 20 கடேட் உறுப்பினர்கள், 7 விமான சேவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 27 பேர் விமானத்தில் பயணித்துள்ளதாக, அந்நாட்டு அவசரப் பிரிவு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து; 22 பேர் பலி-Ukraine Plane Crash-22 Killed Out of 27-3 Missing

இதில் 22 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 3 பேர் காணாமல் போயுள்ளதோடு, அவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

 

 

சுஹுவ் (Chuhuiv) நகரில் உள்ள இராணுவ விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் வைத்து குறித்த விமானம் கீழே வீழ்ந்துள்ளதாக அவசரப் பிரிவு அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதலுக்கும் இந்த விபத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுடன் அரசாங்கப் படைகள் போராடி வரும் பகுதியிலிருந்து சுமார் 100 கி.மீ (60 மைல்) தொலைவில் சுஹுவ் நகரம் உள்ளது.

நேற்று இரவு வேளையில் இடம்பெற்ற குறித்த விபத்தையடுத்து, ஏற்பட்ட தீ பின்னர் அணைக்கப்பட்டுள்ளது.

இது அதிர்ச்சியளிக்கிறது என, அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ (Anton Gerashchenko) ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இவ்விபத்து தொடர்பான காரணத்தை உறுதிப்படுத்தப்பட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைன் நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) இன்று (26) அப்பகுதிக்கு பயணம் செய்யவுள்ளார்.

விபத்துக்கு முன்னர் ஒரு விமானி என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக, கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஒலெக்ஸி குச்சர் (Oleksiy Kucher) தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் சிக்கிய ஒருவர் தீப்பற்றியவாறு விமானத்திலிருந்து ஓடுவதைக் கண்டதாக, விபத்தை நேரில் கண்ட ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதன்போது மற்றொரு கார் எங்கள் பின்னால் நின்றது. நாங்கள் தீயணைக்கும் இயந்திரத்தை எடுத்துக்கொண்டு அவருக்கு உதவ மற்றொரு சாரதியுடன் அங்கு ஓடினோம். என்று  தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் க்ரூஸ் ஏவுகணை என்று தவறுதலாக எண்ணி, ஈரான் இராணுவத்தால் உக்ரைன் பயணிகள் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணித்த 176 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...