உலகில் அதிக எடை கொண்டவர் கொரோனாவிலிருந்து மீண்டார் | தினகரன்


உலகில் அதிக எடை கொண்டவர் கொரோனாவிலிருந்து மீண்டார்

‘உலகின் மிக அதிக எடை கொண்டவர்’ என்று 2017ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஜுவன் பெட்ரோ பிரான்கோ, கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக கொரோனா தொற்றைச் சமாளிப்பது அவருக்கு பெரும் போராட்டமாக இருந்தது.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த அவர் பல ஆண்டுகளாக உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி, வயிற்று குறைப்பு அறுவை சிகிச்சை என பல்வேறு முறைகளைக் கையாண்டு 250 கிலோவுக்கு மேல் எடை குறைத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு 595 கிலோ எடையுடன் இருந்த அவர், தற்போது சுமார் 208 கிலோ எடையுடன் உள்ளார்.

“மிகக் கொடிய நோய்” என கொரோனா தொற்றைக் குறிப்பிடும் பிரான்கோ, “தலைவலி, உடல்வலி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பெரும் அவதியுற்றேன்" என்றார்.

உலக அளவில் அதிகமாக கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் இருக்கும் மெக்சிகோவில் கொரோனா தொற்றி உயிரிழந்த சுமார் 74,000 பேரில் கால்வாசிப்பேர் அதிக பருமனானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...