அச்சம் தணிந்து விட்டாலும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை

பாடசாலைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டியது அவசியம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் தற்போது மீண்டும் முற்றாக வழமைக்குத் திரும்பியுள்ளன. உலக சுகாதார தாபனம் இலங்கைக்கு கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் வழங்கிய இரண்டு சான்றிதழ்களும் இதற்குச் சான்றாகவிருக்கலாம்.

ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா எமது நாட்டில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதேவேளை ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' வேலைத்'திட்டம், வீட்டுத் தோட்ட செயற்பாடுகள் என்பன மக்கள் மத்தியில் வெகுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையிலும் இருந்து வருகின்றன.

எனினும் நாட்டில் அவ்வப்போது கொரோனா நோயாளர்கள் சிலர் இனங்காணப்பட்டு வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இன்று பொதுவெளிகளில் பெரும்பாலும் முகக்கவசம் படிப்படியாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கொரோனா முற்றாக நீங்கி விட்டதான மனநிலை மக்கள் மத்தியில் நிலவுவதே இதற்குக் காரணம். ஆனால் அருகிலுள்ள இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எனவே நாமும் அவதானமாகவே செயற்பட வேண்டும்.

பாடசாலைகள் சிறார்களுடன் தொடர்பானவை. அங்கு இப்படியான நோய்கள் மிக இலகுவாக தொற்றுவதற்கு ஏதுவான களங்களாகும்.இதுதொடர்பாக வைத்தியர் சங்கமும் அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இருந்த போதிலும் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை.

கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் முகக்கவசங்களை பாடசாலைகளில் பெரும்பாலும் காண முடியவில்லை. கைகழுவுதலில் ஆரம்பத்தில் காண்பித்த அக்கறை, கண்டிப்பு தற்போது குறைந்து விட்டது. சமூக இடைவெளிகளும் பின்பற்றப்படுவதில்லை.

விடுபட்ட பாட அலகுகளை முடிக்க வேண்டும் மற்றும் பரீட்சைக்கு தயாராகுதல் வேண்டும் என்ற சிந்தனையை மாத்திரம் மையமாகக் கொண்டு பாடசாலைகள் இன்று இயங்கி வருகின்றன. மாணவர் உளநிலை கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படுவதாக தெரியவில்லையென உளவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளை 1.30மணியுடன் மூடப்பட வேண்டும் என்று கல்விஅமைச்சு உத்தரவிட்டிருந்தும் பல பாடசாலைகள் இன்றும் 3.30மணி வரை தொடருகின்றன. பரீட்சையை மட்டும் மையமாகக் கொண்டு இதனை செயற்படுத்துகிறார்கள் எனக் கூறப்படுகிறது. கல்விப்பணிப்பாளர்களும் இவ்விடயத்தில் பெரிதாக நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையென சில பெற்றோர் கூறுகின்றனர்.

கல்விச் சுமை திணிக்கப்படும் போது மாணவர்களின் உளநிலை, உடல்நிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென்பது கல்வியியலாளர்களினதும் உளவியலாளர்களினதும் கருத்தாகும்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.

பாடசாலை சுற்றாடலை கிருமி தொற்று நீக்குதல், கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், நபர்களுக்கு இடையிலான இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சமூகத்தினரும் தற்பொழுது முழுமையாக கவனம் செலுத்துவதில்லை என்று சில பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விசேடமாக பாடசாலை போக்குவரத்து சேவையை வழங்குதல், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் நேரடியாக தொடர்புபடும் இடங்களில் இவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது பாடசாலை அதிகாரிகள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரின் பொறுப்பாகும்.

அத்தோடு மாணவர்களின் சுகவீனம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி சுகாதார பாதுகாப்பு தொடர்பில் ஆகக் கூடிய வகையில் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் காரணமாக நாட்டில் கொவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் உலகின் ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை சிறப்பான நிலையில் காணப்படுகின்றது.

எனினும் இன்னும் முற்றாக கொரோனா அபாயம் நீங்கவில்லையென்ற எண்ணமும் எம்மத்தியில் இருக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக பாடசாலைகள் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் இயங்க வேண்டும் என்று சுகாதாரஅமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சு சுற்றுநிருபத்தையும் அனுப்பி வைத்துள்ளது. அதற்கேற்ப பாடசாலைகள் இயங்க வேண்டிய கடப்பாடும் உள்ளதென்பதை மறந்து விட முடியாது.


Add new comment

Or log in with...