முழுமையான ஜனநாயக முறைமைகளை பின்பற்றியே 20ஆவது திருத்தம் முன்னெடுப்பு

ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அறிவிப்பு

பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படவுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் முழுமையான ஜனநாயக முறையைப் பின்பற்றி கலந்துரையாடலுக்கும் விவாதத்துக்கும் உட்படுத்தப்படும். சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று ஜெனீவாவுக்கான இலங்கை தூதுக்குழு, மனித உரிமைப் பேரவையின் 45ஆவது கூட்டத்தொடரில் கூறியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் பேரவையில் பேசும் போது,..

20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான உயர்ஸ்தானிகரின் கருத்து ஊகத்தின் அடிப்படையில் தேவையற்றதும்  எதிர்வு கூறல் வகையிலுமானது என்று குறிப்பிட்டார். அறிக்கையின் சிறுவிளக்கம் பின்வருமாறு அமைகிறது. செப்டம்பர் 14ஆம் திகதி இலங்கைக்கான மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் குறிப்புகள் தொடர்பாக இலங்கை அதன் பதிலை வழங்க விரும்புகிறது. இந்தப் பேரவைக்கு தெரிந்த வகையில் கொவிட் -19  தொற்று காரணமாக இவ்வருட பெப்ரவரி- மார்ச் மாதங்களில் முழு உலகமும் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்தது.

பல நாடுகளின் அரசாங்கங்கள் இதில் தாக்கத்தை உணர்ந்திருந்தன. பல்துறை அனுகுதல் மூலம் இலங்கை நோய்த் தொற்று தொடர்வதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. அத்துடன் ஜனநாயக நடைமுறை மீதான கடப்பாட்டை நிலை நிறுத்தியவாறு வெற்றிகரமாகவும் அமைதியாகவும் பாராளுமன்றத் தேர்தலை கடந்த மாதம் நடத்தி முடித்தது. 30/1சீர்த்திருத்தத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொண்ட போதும் இலங்கையின் அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் மீள் நல்லிணக்கம் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் மனித உரிமைகளை எட்டுவதற்கு அரசாங்கத்தின் கொள்கை வரைச்சட்டத்தின் கீழ் உள்ளூரில் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட முறைமையின் வழியில் செயற்பட கடமைப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ சார்ஜண்டுக்கான மன்னிப்பு இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் உள்ள ஏற்பாடுகளின் அதிகாரத்தின்படியே வழங்கப்பட்டதை

இலங்கை அரசாங்கம் இங்கு குறிப்பிட விரும்புகிறது.

நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகக் கூறப்படும் போலி மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுக்கிறது. இக்குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த LLRC மற்றும் பரணகம ஆணைக்குழு, குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கப்ட்ட நிகழ்வுகள், இவ்விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டக்கூடிய சான்றுகள் எதனையும் காணவில்லை.

இந்நிலையில் மேற்படி சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த சான்றும் கிடைக்காத போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இயற்கை நீதியின் கொள்கைகளை அவை மீறுவதாகவும் உள்ளன என்று இலங்கை கூறிக்கொள்கிறது.

இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுமாகும். அத்துடன் எந்தவொரு பிரஜையும் தனதும் தனது குடும்பத்தினதும் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழ வழி வகுக்கும் நோக்கத்தை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.


There is 1 Comment

Add new comment

Or log in with...