பேலியகொடை மெனிங் சந்தை நவ.17 க்கு முன் மக்கள் பாவனைக்கு

1,142 கடைத் தொகுதிகள், வங்கிகள், வாகன தரிப்பிடம்

மருத்துவ வசதி, குளிரூட்டிகள், உணவகம் உள்ளடக்கம்

பேலியகொடை மெனிங் சந்தை தொகுதியை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு புறக்கோட்டையிலுள்ள மெனிங் சந்தை தொகுதியை பார்வையிடுவதற்காக சென்றபோதே அமைச்சின் செயலாளர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இந்த நவம்பர் மாதத்துடன் ஒரு வருடமாவதால், அதற்கு முன்னர் பேலியகொடை மெனிங் சந்தைத்தொகுதியை திறப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 1/2 ஆண்டுகளில் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு காரணமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வளர்ச்சித் திட்டங்கள் பல தடைப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் கீழ் நிர்மாணிப்புத் துறையில் எவ்வித பின்னடைவும் ஏற்படாது. மேலும், அபிவிருத்தி திட்டங்களை சரியான நேரத்தில் கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாநகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு, திண்மக் கழிவு அகற்றுதல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹெவா கூறுகையில்,

“கொழும்பு மெனிங் சந்தைத் தொகுதியை பேலியகொடைக்கு மாற்றிய பின்னர், கொழும்பு மெனிங் சந்தை அமைந்திருந்த காணியை பயனுள்ளதாக பயன்படுத்த ஏற்கனவே திட்டங்கள் உள்ளன.

நெரிசலைக் குறைப்பதற்காக கொழும்பு மெனிங் சந்தைக்கான அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார்.

கோட்டை ரயில் நிலையத்தையும் உள்ளடக்கியவாறு கொழும்பு மெனிங் சந்தைத் தொகுதி அமைந்திருந்த தளத்திற்கான மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு நகரத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வாகவும், மக்களின் வசதி உள்ளிட்ட பல நோக்கங்களுக்காகவும் கொழும்பு மீன் மொத்த விற்பனை சந்தைத் தொகுதியை பேலியகொடைக்கு மாற்றுமாறு அப்போதைய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவினால் 2015 ஆண்டில் அறிவுறுத்தப்பட்டது.

மீன் மொத்த சந்தைத் தொகுதியை பேலியகொடைக்கு மாற்றப்பட்ட நேரத்தில், கொழும்பு காய்கறி சந்தையையும் பேலியகொடைக்கு மாற்றுவதற்கான ஆரம்ப திட்டங்களை அப்போதைய அரசின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆரம்ப திட்டங்களின்படி, மெனிங் சந்தைத் தொகுதி கட்டுமானம் 2016 இல் தொடங்கியது.

இந்த மெனிங் சந்தைத் தொகுதி கீழ் 02 ஏக்கராக வரையறுக்கப்பட்டிருந்த மெனிங் சந்தைத் தொகுதி 15 ஏக்கர் பரப்பளவில் முழுமையான மொத்த விற்பனை நிலையமாக மாற்றப்படும்.

புதிய மெனிங் சந்தைத் தொகுதியில் 1,142 கடைகள், ஒரு பெரிய வாகன நிறுத்துமிடம், ஊழியர்களுக்கான ஓய்வறைகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் அதிகுளிரூட்டி வசதிகள் ஆகியவை உள்ளடக்கப்படவுள்ளன.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷன் டி சில்வா மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரனவீர ஆகியோரின் மேற்பார்வையில் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, புதிய மெனிங் சந்தை வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு பலவிதமான வசதிகளை வழங்கப்படும்.

பேலியகொடை மெனிங் சந்தை தொகுதி செயற்றிட்டத்தின் அனைத்து கட்டுமான மற்றும் கட்டடக்கலை வடிவமைப்புகளும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் பொறியாளர்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பேலியகொடை மெனிங் சந்தை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் கூறுகிறது.

தற்போது கொழும்பு மெனிங் சந்தையில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள், கொழும்பு மெனிங் சந்தையை பேலியகொடையில் உள்ள புதிய மெனிங் சந்தைத் தொகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Add new comment

Or log in with...