வீட்டுத் தோட்டங்களில் மிளகு பயிரிடுவது பண வருவாய் ஈட்டும் இலகுவான தொழில்

செய்கை முறைகளின் விரிவான விளக்கங்கள்

இலங்கை மக்கள் அனைவராலும் உணவுக்கான வாசனைத் திரவியமாகவும், மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் மிளகுப் பயிரானது எமது நாட்டின் வரலாற்றில் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இப்பயிரின் தோற்றுவாயாக இந்தியா விளங்குகின்றது. கிழக்கு ஆசியா, வடக்கு அமெரிக்கா நாடுகளில் ஏற்றுமதிப் பயிராகவும் இலங்கையில் சிறு ஏற்றுமதிப் பயிராகவும் மிளகு காணப்படுகிறது.

இலங்கையில் மிளகுப் பயிரானது மாத்தளை, கண்டி, கேகாலை, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 42,989 ஹெக்டயர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படுகின்றது. அதேவேளை யாழ்குடாநாட்டில் வீட்டுத் தேவைகளுக்காக சிலரது வீட்டுத் தோட்டங்களில் இப்பயிர் கலப்புப் பயிராக நடப்பட்டுள்ள போதிலும், அங்குள்ள பெரும்பாலான வீட்டுத் தோட்டங்களில் இப்பயிர் நடப்படுவதில்லை.

இதற்கு மிளகு நாற்றுக்களைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமம், பராமரிப்பு சம்பந்தமான தொழில்நுட்ப அறிவின்மை போன்றன காரணங்களாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாக விலை உயர்ந்த பொருளாக மிளகு காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் மாதமொன்றிற்கு சராசரியாக 100 கிராம் எனும் அடிப்படையில் வருடத்திற்கு 1200 – 1500 கிராம்  மிளகு நுகரப்படுகின்றது.

மிளகை வீட்டுத் தோட்டங்களில் நடுகை செய்தால் மிகுந்த பலன் பெறலாம்.

பெப்பரேசியே (Piperaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஏறித்தாவரமான (Climbers)  மிளகு பெப்பர் நைகிறம் (Piper  nigrum)   என்ற தாவரவியல் பெயரினால் அழைக்கப்படுகின்றது. இது நிழலை விரும்பும் பயிராக இருப்பதால் கலப்புப் பயிராக நடுகை செய்யலாம். இதற்குரிய பொருத்தமான காலநிலையாக வளிமண்டல வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகவும், வளிமண்டல ஈரப்பதன் 80% ஆகவும் இருத்தல் அவசியமாகும்.

எனினும் நல்ல நிழலை வழங்கக் கூடிய பலா, மா, போன்ற மரங்களில் மிளகுப் பயிரை படர விடும் போது இப்பயிருக்குத் தேவைப்படும் சிறப்பு வெப்பநிலையையும் ஈரப்பதனையும் வழங்கக் கூடியதாகவிருக்கும்.

இலங்கையில் பனியூர்1, குச்சின், MB12, GK49 ஆகிய உள்ளுர் இனங்கள் செய்கை பண்ணப்படுகின்றன. இருந்த போதும் உள்நாட்டு இனங்களே எமது காலநிலைக்கு மிகவும் பொருத்தமானதாகக் காணப்படுகின்றன.

இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் இன்கிரிரால, கும்புரரால, பூட்டாவரால எனும் மூன்று புதிய மிளகு இனங்களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இப்பயிருக்கான நடுகைப் பொருள் வெட்டுத் துண்டங்கள் ஆகும்.

நடுகைப்பொருளான வெட்டுத்துண்டம் பெறலுக்கான தாய்த் தாவரத்தின் தெரிவு நன்றாக இருக்க வேண்டும்.

வெட்டுத் துண்டங்களைப் பெறுவதற்கு தெரிவு செய்யும் தாய்த் தாவரம் கீழ்வரும் இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆரோக்கியமான, வீரியமுள்ள சிறந்த பற்றிப் பிடிக்கும் ஆற்றல் உள்ளவை. தாராளமான பக்கக் கிளைகளை உருவாக்குவதுடன் கணு இடைவெளி சிறிதாகவும் இருத்தல். 5-7 கணுக்கள் 25 செ.மீ நீளமுள்ள கிளையில் காணப்படல் வேண்டும்.

எல்லா அல்லது பெரும்பாலான கணுக்களில் பழக்குலைகள் தோன்றுதல், 15 செ.மீ இலும் கூடிய நீண்ட பழக்குலைகளாக இருத்தல், உருண்டையான பழங்களாக இருத்தல், நோய் பீடைத் தாக்கமற்றதாக இருத்தல், வருடத்திற்கு வருடம் சீரான உயர் விளைச்சலைக் கொண்டிருத்தல் போன்றன சிறந்த பண்புகள் ஆகும்.

ஒழுங்கற்ற முறையில் காய்க்கும் கொடிகளை தாய்த் தாவரங்களாக தெரிவு செய்யக் கூடாது.

தண்டின் நுனிப் பகுதி, பக்கக் கிளைகளிலிருந்து பெறப்படும் துண்டங்கள் மற்றும் தண்டின் அடிப்பக்கத்திலுள்ள ஓடிகள் நடுகைப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் தண்டின் நுனிப்பகுதியும் தண்டின் அடிப்பக்கத்திலுள்ள ஓடிகளுமே நடுகைக்குப் பொருத்தமானவை.

வெட்டுத் துண்டங்களைப் பெறும் போது கருத்திற் கொள்ள வேண்டியவை பின்வரும் விடயங்களாகும். பழங்கள் அறுவடை செய்யப்பட்ட பின்பு தாய்த் தாவரத்திலிருந்து வெட்டுத் துண்டங்களைப் பெற வேண்டும். ஒவ்வொரு துண்டமும் 2-3 கணுக்கள் கொண்டதாகவும் ஒரு இலை உடையதாகவும் இருத்தல் வேண்டும்.

நடுகை செய்யும் போது நிழலான இடத்தைத் தெரிவு செய்தல் வேண்டும். நடுகை இடைவெளி – 2.5x2.5m அல்லது 71/2 X 71/2 அடி ஆகும்.

நடுகைக்குழி 11/2'X11/2'X 11/2' அளவில் அமைக்கப்பட வேண்டும். கூட்டெரு, மேல்மண்  என்பவற்றை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கப்பட்ட ஊடகத்தினால் நடுகைக் குழியை நிரப்பி நாற்றை நடுகை செய்தல். நடுகை செய்தவுடன் நிழல் வழங்கப்படல் முக்கியமானது.

மண் ஈரப்பதனைப் பேணுவதற்காக தென்னம்பொச்சு, உமி, காய்ந்த புற்கள் போன்றவற்றை நடப்பட்ட மிளகுத் தாவரத்தின் அடிப்பகுதியை சுற்றி பத்திரக்கலவையாக இடல் வேண்டும். நடப்பட்ட தாவரத்திற்கு சீமைக்கிழுவை, அகத்தி, முள்முருக்கை போன்றவற்றால் ஆதாரம் வழங்கல். வீட்டுத் தோட்டங்களில் கமுகு, பலா, மா போன்ற மரங்களில் மிளகுப் பயிரை ஏறிகளாக வளர விடலாம். பசளைப் பிரயோகத்தின் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சேதனப் பசளை இடுவதாயின் இரசாயன உரம் இடுவதன் அளவை அரைவாசியாகக் குறைத்துக் கொள்ள முடியும்.

சீமைக் கிழுவை இலை, உலர்ந்த மாட்டுச் சாணம், உலர்ந்த கோழி உரம்12, மண்புழு உரம் என்பன சேதனப் பசளைகளாகும். மிளகுக் கொடியில் நேர்த்திருப்பக் கிளை, பக்கத்திருப்பக் கிளை என இரண்டு வகை கிளைகள் தோன்றும். நேர்த்திருப்பக் கிளையில் 3-4 கிளைகளை மட்டும் அனுமதித்து ஏனைய கிளைகளை அகற்றல் வேண்டும். பக்கத்திருப்ப கிளைகளை கத்தரித்தல் வேண்டும்.    நோய்ப் பீடைக்குட்பட்ட வாதுக்கள், உற்பத்தி குறைவான வாதுக்கள் என்பவற்றைக் கத்தரித்து காற்றோட்டம் உள்ளவாறு பேணுதல் வேண்டும்.

மிளகுக் கொடியின் முனைஅரும்புகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறமான பூக்கள் தோன்றும். மகரந்தச் சேர்க்கை நீரின் மூலமே நடைபெறுகின்றது. இதனால் இக்காலங்களில் மழைவீழ்ச்சி முக்கியமானதொன்றாகும். இவற்றுக்கு மாறான காலங்களில் நீரை விசிறுவதன் மூலம் மகரந்தச் சேர்க்கையைத் தூண்ட முடியும். வருடத்தில் இரு போகங்களிலும் பூக்கள் தோன்றும். 6-7 மாதங்களில் முதிர்ந்த காய்களைப் பெற முடியும்.  முறையான பராமரிப்பின் கீழ் வளர்ந்த கொடிகளிலிருந்து இரண்டரை வருடமளவில் அறுவடையை மேற்கொள்ள முடியும். பழக்காம்பொன்றில் 100-120 முதிர்ந்த பழங்கள் காணப்படும். இப்பழங்களுக்கிடையில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற வித்தியாசங்களை அவதானிக்க முடியும்.

பழக்காம்பின் நுனிப் பகுதியில் காணப்படும் பழமானது விரல்களால் நசிக்க முடியாதளவிற்கு கடினமாகக் காணப்படும். பழக்காம்பினை கூரிய கத்தியினால் வெட்டி 24--48 மணித்தியாலங்கள் குவித்து வைத்தல் வேண்டும். இதன் போது பச்சை நிறமான விரல்களால் நசிக்க முடியாத பழங்களும் கறுப்பு நிறமாக மாறும். பின்னர் இவற்றை 5-6 நாட்கள் நன்கு காய விடுவதன் மூலம் கறுப்பு நிறமான மிளகினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சாதாரணமாக மிளகுக் கொடி ஒன்றிலிருந்து ஒரு போகத்தின் போது 750-1000 கிராம் கறுப்பு மிளகைப் பெற முடியும். மேற்கூறியவாறு மிளகுப் பயிரை வீட்டுத் தோட்டங்களில் நடுகை செய்து பராமரிப்பதன் மூலம் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் மேலதிக வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

வடமாகாணத்தில் அதிகளவான விஸ்தீரணத்தில் மிளகுப் பயிர் செய்கை மேற்கொள்ளபடுவதில்லையாகையால் விவசாயத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் நாற்றுமேடையாளர்களில் குறிப்பிட்ட சிலர் மிளகு அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களில் இருந்து  மிளகுக் கன்றுகளை பெற்று விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே வீட்டுத் தோட்டங்களில் மிளகுக் கொடியை நடுகை செய்ய விரும்புபவர்கள் தங்கள் பகுதி விவசாயப் போதனாசிரியர்களுடன்  தொடர்பு கொண்டு மிளகுக் கன்றுகளை கொள்வனவு செய்து நடுகை செய்து பயனடைய முடியும்.

திருமதி செ.செந்தூர்க்குமரன்
விவசாயப் போதனாசிரியர்
மாகாண விவசாயத் திணைக்களம்
(வட மாகாணம்)


Add new comment

Or log in with...