மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அரசியல் தலைவர்கள் அனுதாபம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கியஸ்த்தர்களும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்திகள் வருமாறு;

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறிப்பாக மலையக தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, வட கிழக்கிலும் நாடெங்கிலும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு மத்தியில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் பேரிழப்பாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் தானைத் தளபதியாக பல தசாப்த காலங்களாக கோலோச்சிய மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் அடுத்த அரசியல் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட ஆறுமுகன் தொண்டமான் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பியதோடு நில்லாது, பெரும்பாலும் தான் சார்ந்த மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீகப் போராட்டத்தில் ஆட்சியாளர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்கவராக விளங்கினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவராகக் காணப்பட்ட நண்பர் ஆறுமுகன் பொதுவாகவே ஸ்தாபகத் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் அரசியல் களத்தில் ஏற்படும் உடைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் துணிச்சலுடன் முகம் கொடுத்து தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மலையகத் தொழிலாளர் பரம்பரையின் சமூக அரசியல் செல்நெறியை முன்கொண்டு செல்வதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தார்.

மலையக மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை உரியமுறையில் வென்றெடுப்பதற்காக அவர்களிலிருந்து தோற்றம் பெற்றுள்ள ஏனைய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆயினும், இறுதி மூச்சுவரை தனது மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும், விமோசனத்திலும் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் கண்ணும் கருத்துமாக இருந்ததற்கு அவரது அரசியல் நகர்வுகளும், நடவடிக்கைகளும் சான்று பகர்கின்றன.

தொண்டமானின் மறைவு மலையகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முறையான திட்டங்கள் தீட்டியவர். 1994 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அவர், தனது பாட்டனார் சௌமிய மூர்த்தி தொண்டமானால் மிகச் சிறப்பாகப் புடம் போடப்பட்டிருந்தார். 1999 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை பதவியை ஏற்றதிலிருந்து, சுமார் இருபது வருடங்கள் மலையக சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், அமரர் ஆறுமுகம் தொண்டமானின் ஆளுமைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

சிறுபான்மை சமூகமொன்றின் தலைவரான அவர், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்காகவும் குரல் கொடுத்தவர்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்திலே சமூகத் தலைவனுக்குரிய ஆளுமைகளை வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வென்றெடுக்கும் அவரது பிரயத்தனங்கள், அன்னாரின் இறுதி மூச்சு அடங்கும் வரை இருந்தமை, நேற்று மாலை முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.”

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு
முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன்

சௌமியமூர்த்தி தொண்டமானை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மலையக தமிழர்களுக்கு பல சேவைகளை ஆற்றிக்கொண்டு இருக்கும் போது ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்தியா வம்சாவளி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட 1970ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியின் ஊடாக அதனை இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களின் கூட்டுத்தலைமையாக மாற்றியமைத்தவர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

ஆறுமுகன் தொண்டமான் என்ற ஒரு தலைவனின் சகாப்தம் முடிவடைந்ததாக நான் கருதவில்லை மாறாக தொண்டமான் பரம்பறையூடாக மலையக மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகள்  ஒரு போதும் முற்றுப்பெறாது.

இந்த இயக்கத்தின் தொடர்  செயற்பாடுகள் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு தொடர்ந்தும் அளப்பெரிய சேவையை ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அன்னாரின் பிரிவில் சொல்லொன்னா துயரம் கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் முக்கியமாக அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கின்றேன்.

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் இறப்பு மலையக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மலையகம் ஒரு சாணக்கிய தலைவனை இழந்து வேதனைப்படுகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அமரர் சந்திரசேகரனின் இழப்பை மலையகம் சந்தித்தது போலவே தற்போது அமரர் ஆறுமுகம் தொண்டமானையும் இழந்து தவிக்கிறது.

சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமைத்துவத்தை மலையகம் இழந்துள்ளமை துர்பாக்கியமானது.

ஆறுமுகம் தொண்டமானின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைமையை இழந்து தவிக்கிறது இ.தொ.கா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்

தமது தலைமைத்துவத்தை திடீரென இழந்துத் தவிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வுகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துங்கள் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவினை அடுத்து விடுத்திருக்கும் அஞ்சலி குறிப்பிலேயே  தமது கட்சியினதும் தொழிற்சங்கத்தினதும் ஆதரவாளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் கட்சியோடு கருத்தியல் சார்ந்த முரண்பாடுகளை எமது அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருந்த போதும் தனிப்பட்ட அவரது ஆளுமையை எதிரணியினர் என்றவகையில் எப்போதும் அவதானித்து வந்துள்ளோம். எதிரணியை கவனித்து கண்டுகொள்ளாது விடும் அரசியல் ராஜதந்திரம் அவருடையது.

சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையை ஆட்சி செய்யும் எந்த அரசாங்கத்திலும் ‘தொண்டமான்’ எனும் பெயருக்கு ஒரு அங்கீகாரம் இருந்தது.

அவர்கள் கொண்டிருக்கக் கூடிய அரசியல் கருத்து நிலைப்பாட்டுக்கு அப்பால் தொண்டமான் எனும் பெயர் ஒரு தேசிய அடையாளத்தைப் பெற்றிருந்தது.

பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை இடம்பெற வேண்டும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும்” - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், முன்னாள் எம்.பியுமான வேலுகுமார் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையகத் தமிழர்களின் ஆளுமைமிக்க அரசியல் தலைவராக அமரர்.ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார். மக்களுக்காக எந்தவொரு அரசாங்கத்துடனும் பேரம் பேசக்கூடிய வல்லமை அவரிடம் இருந்தது. ஆட்சியாளர்களும் அவரை ஒரு தேசிய இனத்தின் தலைவராக அங்கீகரித்திருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில்கூட சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அமைச்சரவையிலும் ஒரு சமூகத்தின் குரலாக அவர் ஒலித்தார்.

எவ்வளவுதான் நெருக்கடிகள், சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து தான் சார்ந்த கட்சிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார். வெற்றியை நோக்கியும் அழைத்துச்சென்றுள்ளார். பூரண அரச மரியாதையுடன் அமரர் தொண்டமானின்  இறுதிக்கிரியைகள் இடம்பெற வேண்டும். அன்னாரது இழப்பால் துயருறும் அனைவரது துயரிலும் நானும் பங்கேற்கிறேன்.

மலையகத்திலுள்ள எமது சகோதர தமிழ் மக்கள் அன்பான நண்பர் ஒருவரை இழந்து விட்டனர்
முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து கேள்வியுற்றதும் ஆழ்ந்த துயரம் கொண்டேன். அவர் 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் முதற்தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அன்று தொடக்கம் அவர் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி அரசியல் வாதிகளுடன் இணைந்து கட்சிக்காக வேலை செய்தார்.

கடந்த 26 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து வந்த ஆறுமுகன் தொண்டமான் எம் அனைவரதும் மிகச்சிறந்த நண்பர். அவரை தனிப்பட்ட வகையில் நாமும் அவரது சேவையை அடிப்படையாகக் கொண்டு மக்களும் அவர் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவரின் மறைவு காரணமாக மலையகத்திலுள்ள எமது சகோதர தமிழ் மக்கள் அன்பான நண்பர் ஒருவரை இழந்து விட்டனர். அதேபோலவே நாமும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த சிறந்த அரசியல் நண்பர் ஒருவரை இழந்துள்ளோம்.

அவருக்கு நாம் செய்யும் கெளரவமாக மலையகத்திலுள்ள தமிழ் மக்களுக்கு மிகச்சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுப்போமென நம்புகின்றேன். நாம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம், என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பு
முன்னாள் பிரதி அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன்


இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான தம்பி ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு செய்தி கேட்டு மிகுந்த துக்கத்திற்கு உள்ளானேன். இந்த திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரது அனுதாப செய்தியில்,

எனக்கும்  அவருக்கும் நீண்டகால உறவு இருக்கின்றது நான் எனது அரசியலை அவரது தாத்தாவான சௌமியமூர்த்தி தொண்டமானுடனேயே ஆரம்பித்தேன். ஐயாவின் இறப்பிற்கு பின்னர் எனக்கு மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை பெற்றுக்  கொடுத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானே.

தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

இருந்தும் இவரையோ இவரின் குடும்பத்தையோ ஐயா அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானையோ விமர்சித்தது கிடையாது. இவர்களுக்கு என்று ஒரு மரியாதை என்னிடம் இருந்தது.

தற்போது இந்த இக்கட்டான நிலையில் துயரத்தில் இருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் உட்பட அவரது விசுவாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இவரது இறுதி கிரிகைகள் மலையகத்தில் பூரண அரச மறியாதையுடன் நடப்பதற்கு அராங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மலையத்தில் தொழிற்சங்க மற்றும்   தொழிற்சங்கம்  கட்சி பேதங்கள் இன்றி அவருக்கான மறியாதையை அனத்து மக்களும் செலுத்த வேண்டும். இவரது இறுதி கிரிகைள் முடியும் வரை மலையகத்தில் துக்கதினம் அனுஷ்டிக்க வேண்டுமென அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் தொண்டமானின் மறைவு அதிர்ச்சி தருகிறது
முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு செய்து அதிர்ச்சியை தருகிறது.

இவரது இழப்பானது மலையக மக்களுக்கு பேரிழப்பாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு புதிய தலைமை வகித்து அமைச்சுப் பதவிகள் பெற்று மலையக மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளார்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் ஆறுமுகன் தொண்டமானுக்கும் எனக்கும் இடையில் இருந்தபோதும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபதாபங்களும் இருந்ததில்லை. அதனால் அவரது மறைவு கவலை அளிக்கிறது. அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஆறுமுகன் தொண்டமானின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மலையக மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மலையக மக்களுக்கு தலைமை கொடுத்த தலைவர் மற்றும் அமைச்சர் என்ற அடிப்படையில் அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

ஆறுமுகன் தொண்டமானும், நானும் வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரே இலக்கை கொண்ட நதிகள்
முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்

நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரே இலக்கை கொண்ட நதிகள். இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள். மறைந்த நண்பர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடும்படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தோழர்களையும், அனைத்து  மக்களையும் கோருகிறேன்.  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் தமுகூ தலைவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரசின் மறுவடிவம்.

அந்த உறுதியான ஆரம்பமே இன்று ஒரு தொழிற்சங்கமாகவும், அரசியல் கட்சியாகவும் இதொகாவை நிலைநிறுத்தியிருக்கிறது.

இலங்கை இந்திய காங்கிரஸ் காலத்தில் இருந்தே அதற்குள், நிகழ்ந்து வந்த கோட்பாட்டு முரண்பாடுகள் காரணமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிறந்தது. அந்த சிந்தனையே இன்று ஜனநாயக மக்கள் முன்னணியாக, இன்று சகோதர கட்சிகளுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியாக பரிணமித்துள்ளது.

இதொகாவை விட்டு, பலர் பல காரணங்கள் காரணமாக பிரிந்து சென்ற போதெல்லாம், அதை பலவீனமடைய விடாமல் கொண்டு நடத்தியவர் ஆறுமுகன் தொண்டமான். மலையக தமிழ் மக்களின் நலன்களை தனக்கே உரிய, தான் நம்பும் வழிமுறைகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.

அவர் இந்த வயதில் இறந்திருக்க கூடாது. இன்னமும் வாழ்ந்திருக்க வேண்டும்.  நமது மக்கள் எதிர்நோக்கும் சவால் மிக்க இன்றைய காலகட்ட பின்னணியை கணிக்கும் போதே ஆறுமுகன் தொண்டமானின் திடீர் இழப்பின் ஆழம் புரிகின்றது. வேதனை விளங்குகிறது. அவருடன் அரசியல்ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது இன்றைய மறைவின் வெறுமை தெரிகின்றது.

கடந்த வருடம் இதே மே மாத இறுதியில் புது டில்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று அன்றைய நமது நாட்டு ஜனாதிபதியின் தூதுக்குழுவில் நாம் இருவரும் பயணித்தோம். அதுவே நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் ஒன்றாய் கலந்துக்கொண்ட இறுதி வெளிநாட்டு நிகழ்வு.

இதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன், 2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இலங்கையின் அனைத்து தமிழ் பேசும் அரசியல் கட்சி தலைவர்களின் மாநாட்டில் நானும், அவரும் கலந்துக்கொண்டோம்.

இந்நிகழ்வுகளில், நமது மக்களின் நல்வாழ்வு தொடர்புகளிலும், அரசியல் முரண்பாடுகள் மத்தியில் எங்கெங்கே இணைந்து செயற்படலாம் என்பது பற்றியும், நண்பர் ஆறுமுகனும், நானும் நடத்திய கலந்துரையாடல்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.

2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகள் மாநாட்டில், நண்பர் பெரியசாமி சந்திரசேகரனும் கலந்துக்கொண்டார். இன்று சந்திரசேகரனும் இல்லை. அவரும் தனது 53 வயதில் இறந்து போய் விட்டார்.  இன்று நண்பர் ஆறுமுகன் தொண்டமானும் தனது 55 வயதில் இறந்து போய் விட்டார். இந்த வெறுமை இன்று மலையக தமிழ் சமூகத்தை வாட்டுகின்றதை நான் உணருகின்றேன். இந்த சவால்களை நாம் ஒருமுகமாக எதிர்கொள்ள திடசங்கற்பம் பூணுவோம். 

சிறந்ததொரு சமூகத் தலைவனை, தலைமையை நாடு இழந்துள்ளது
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா

தொண்டமானென்ற வரலாற்றுப் பெயரும் இ.தொ.கா என்ற பேரியக்கமும் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் தடம் பதித்துள்ளதாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

கட்சியின்  மரதன் ஓட்டத்துக்கான அடுத்த அடியை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், இளைஞரான ஆறுமுகம் தொண்டமானிடம் கொடுத்ததையடுத்து, கட்சியினதும் தலைமையினதும் இலட்சியங்களை முறையாக முன்னெடுத்து, நாட்டின் நிலைமைக்கேற்ப தனது சமூகத்துக்கு தேவையானவற்றை முறையாகவும் படிப்படியாகவும் சாதித்த தலைவர் அவர்.

சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளில் என்னோடும் எமது கட்சியோடும் எப்பொழுதுமே பேச்சுவார்த்தை நடத்தி முடிவுகளை எடுப்பதற்கு துணைபோன தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். அவரது இச்செயற்பாடுகள் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் அஷ்ரபின் உறவுகளையே நினைவு கூருகின்றது.

பாராளுமன்றத்தில் கடைசியாக சந்தித்த வேளை பல தரப்பட்ட விடயங்களை தீர்க்கமாக பேசிக் கொண்டிருந்தோம். நமது நாடு இன்று தேடி நிற்கின்ற அரசியல் தீர்வானது, சகல இனத்தவருக்கும் ஏதாவதொரு கணிசமான விகிதாசாரத்தில் குடியிருப்பு நிலம் உட்பட விவசாயக் காணிகள், ஏனைய அரசியல் தொழில்வாய்ப்புக்கள் பகிரப்படுவதே சாலச் சிறந்ததென்ற,  தேசிய காங்கிரஸின் பாலமுனைப் பிரகடனத்தின் மூலமே எட்டப்பட முடியுமென்பதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார். இதுதான் நமது நாட்டின் முதுகெலும்பான தோட்டத் தொழிலாளர்களுக்கும் முறையானது என்ற எமது எண்ணக் கருவை ஏற்றுக் கொண்டு அவற்றைப் படிப்படியாக எட்டுவதற்கு உறுதி நிற்பதாக உறுதியளித்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்.

இப்படியான சிறந்ததொரு சமூகத் தலைவனின் இழப்பு மலையக சமூகத்துக்கு மாத்திரமல்ல நாட்டுக்குத் தகுதியான சிறுபான்மைத் தலைமையை இழந்துள்ளதாகவே நாம் கருதுகிறோம். மேலும் தேசிய காங்கிரஸ் நல்லதொரு சகோதரக் கட்சியின் தலைமையை இழந்து தவிக்கிறது. தனிப்பட்ட முறையில் நானுமொரு நல்ல நண்பனை இழந்த துயரத்தில் தவிக்கிறேன். அன்னாரது இழப்பால் துயருறும் அவரது மனைவி, மக்கள், குடும்பம் உறவுகளுக்கப்பால் ஒரு சமூகமே முழுமையாக சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மாத்திரமன்றி,பெரும்பான்மை சிங்கள சமூகமும் நம்பிக்கையுடன் அன்பு கொண்டிருந்த ஆறுமுகத்தின் இழப்பால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளது. இதே வேளை நானும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். காலத்தின் அவசரத்தால் சௌமியமூர்த்தி தொண்டமான் அமரத்துவம் அடைந்ததைப் போன்றே, இன்று ஆறுமுகம் தொண்டமானும் அமரராகி விட்டார். அவர் பிரதிநிதித்துவப்படுத்திய இந்த சமூகமும் அவரது கட்சியும் அடுத்த அடியை வைத்து இலக்கு நோக்கி ஓட மேலும் பலப்பட வேண்டும்.


Add new comment

Or log in with...