வனவிலங்குகளை உண்பதற்கு வூஹான் நகரில் தொடர்ந்து தடை | தினகரன்


வனவிலங்குகளை உண்பதற்கு வூஹான் நகரில் தொடர்ந்து தடை

வனவிலங்குகளை வேட்டையாடுவது மற்றும் உண்பது உட்பட வனவிலங்கு வர்த்தகத்திற்கான தடையை சீனாவின் வூஹான் நகர நிர்வாகம் நீடித்திருப்பதாக சீனாவின் கிளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இருக்கும் எந்த ஒரு வனவிலங்கு மற்றும் நீர்சார்ந்த வனவிலங்குகளின் நுகர்வுக்கு இதில் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அவைகளை கூண்டிலிட்டு வைப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக வூஹான் நகர நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு இறுதியில் வூஹான் நகரிலேயே தோன்றியதோடு அது வனவிலக்குச் சந்தை ஒன்றில் இருந்து ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இதனை அடுத்து சீனா கடந்த ஜனவரியில் வனவிலங்குகள் வர்த்தகத்திற்கு தற்காலிக தடை விதித்தது.

எனினும் இதற்கு முன்னர் சார்ஸ் வைரஸ் பரவியபோதும் சீனா இதுபோன்ற தடையை அமுல்படுத்தி இருந்தது.

ஒரு மாதம் கழித்து சீன நிர்வாகம் வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகத்தை முற்றாக தடை செய்ததோடு மக்களின் வாழ்வு மற்றும் சுகாதாரத்தின் பாதுகாப்பிற்காக வனவிலங்குகளின் நுகர்வை இல்லாமல் ஒழிப்பதாக அறிவித்தது.

எனினும் சீன சந்தைகள் மற்றும் வேறு இடங்களில் வனவிலங்குகள் தொடர்ந்தும் விற்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கொவிட்--19 வைரஸ் தொற்றின் உண்மையான மூலம் எதுவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படாத போதும் அது விலங்கு ஒன்றில் இருந்து வந்திருப்பதாக ஆதாரங்கள் காட்டுகின்றன.


Add new comment

Or log in with...