கொரோனா அச்சம் தணிந்தாலேயே வாழ்க்கைத் துன்பமும் நீங்கும்! | தினகரன்


கொரோனா அச்சம் தணிந்தாலேயே வாழ்க்கைத் துன்பமும் நீங்கும்!

ஒருபுறம் வைரஸ் தொற்று, மறுபுறம் இயற்கை அனர்த்த அபாயம்;. கிழக்கு மீனவர்கள் வருமானம் இழப்பு

உலகிலுள்ள தொழில்களில் மிகவும் உயிராபத்து நிறைந்த தொழில்களுள் ஒன்றுதான் மீன்பிடித் தொழில். தமது உயிரை துச்சமென மதித்து பாரிய கடல் அலைக்கு மத்தியில் உயிர்ப் போராட்டம் நடத்தியே கரைக்கு மீன்களைக் கொண்டு வருபவர்கள் மீனவர்கள்.

ஆறு, குளம், குட்டை என்பவற்றில் மீன் பிடிப்பதை விட கடலில் மீன் பிடிப்பதென்பது முற்றிலும் வேறுபட்டது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது அதிகமான உயிரிழப்புகளை கிழக்கு கரையோரப் பிரதேசம் சந்தித்தது. உடைமைகளையும் சொந்த பந்தங்களையும் குடியிருப்புகளையும் இழந்த மக்கள் ஏராளம். அன்று ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுசெய்ய முடியாதபடி இன்றும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்று உலக நாடுகளையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் இவர்கள் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற இக்காலப் பகுதியில் ஆழ்கடலில் இயந்திரப் படகு மூலம் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களால் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் கூட்டாகச் சேர்ந்தே வலை இழுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் சமூக இடைவெளியைப் பேணுவது என்பது முடியாத காரணம். அதேசமயம் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற வேளையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீன் பிடித்து வந்தாலும் அதனை விற்பனை செய்வதில் படாத பாடுபட வேண்டியுள்ளது.

இதனால் மீன்பிடித் தொழிலையே ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள மீனவக் குடும்பங்கள் படுகின்ற கஷ்டங்களும் கவலைகளும் சொல்லில் அடங்காதவையாகும்.

குடும்பத்தினரைப் பிரிந்து நடுக்கடலுக்கு படகுகளில் செல்லும் மீனவர்கள் மீண்டும் கரைக்குத் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் கடவுளை நம்பியே அவர்கள் மீன் பிடிக்கச் செல்கின்றார்கள்.

கடலில் ஏற்படும் பாரிய அலை, கடல் கொந்தளிப்பு, கடற்கொள்ளையர்களின் அட்டகாசம், பாதுகாப்பு கெடுபிடி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையும் இவர்களுக்கு ஏற்படுகின்றது.

கடலில் பலமான காற்று வீசும் போதும் படகுகளில் ஏற்படும் இயந்திரக் கோளாறு காரணமாகவும் படகுகள் வேறு திசைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அல்லலுற்ற சந்தர்ப்பங்களும் எண்ணிலடங்காதவையாகும். இதன் போது மீனவர்கள் உயிரிழந்த பரிதாபங்களும் உள்ளன.

தற்போது இடிக்கு மேல் இடி விழுவது போன்று கொரோனா வைரஸ் கோரப்பிடியால் தொழிலிழந்து, வருமானம் இழந்து அவர்கள் சிரமப்படுகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்படும் போது தங்களது ஜீவனோபாயத்திற்காக கரைவலை மூலம் மீன் பிடிக்கலாம் என்று இவர்கள் இருக்கும் போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாதுள்ளது. தமது தோணி, படகு மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் பாரிய கஷ்டங்களை மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்கள் சுயமாக உழைத்து சம்பாதித்து வாழக் கூடிய வல்லமை உள்ளவர்களாவர். இன்றைய கொரோனா அச்சுறுத்தலே இவர்களது வருமானத்தை இல்லாமல் செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அவர்கள் காத்திருக்கின்றனர்.

 

எம்.ஐ.எம்.அஸ்ஹர்
மாளிகைக்காடு குறூப் நிருபர்

 

 

 

 


Add new comment

Or log in with...