வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்ட நியதிகள் தயாரிப்பு

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் விரைவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எத்தகைய அச்சுறுத்தல்களையும் முறையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய சட்ட நியதிகள் உருவாக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பான நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

உலகில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பில் முன்னணியில் திகழ்வது இலங்கையாகும்.

மரண வீதம் 9.5 விட குறைவாகவே காணப்படுகிறது. அந்த வகையில் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாடுகளில் குறைந்த மரணம் வெற்றிகரமான வைரஸ் ஒழிப்பு என்ற ரீதியில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளைப் போலன்றி நாட்டில் முதலாவது வைரஸ் தொற்று நோயாளி இனங்காணப்பட்ட உடனேயே வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. எனினும் ஏனைய நாடுகள் வைரஸ் தொற்று பரவல் அதிகமாகி மோசமான நிலை உருவாகிய பின்பே முறையான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

அதேவேளை கொரரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினரின் சிபாரிசு பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...