எழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே!

கொவிட்-19 என்ற வைரஸ் தற்பொழுது உலகத்தை வீட்டுக்குள் முடக்கி வைத்து அனவரையும் சடப்பொருளாய் ஆக்கியுள்ளது. காலங்கள், நேரங்கள் வீணே கழிகின்றன. இக்காலங்களில் நல்ல நூல்களை வாசித்து பயன் பெறுவோம். இக்கட்டுரை வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக எழுதப்பட்டதாகும். இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கு இதனை முன் வைப்பதில் மகிழ்வடைகின்றேன்.

ஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என மகாத்மா காந்தி கூறியிருப்பதை கருத்திற் கொண்டு வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பது நன்கு கற்றுத்தேர்ந்தவர்களின் அனுபவக் கூற்றாகும் என்பார்கள்.வாசிப்பு மனித மேம்பாட்டுக்கும் அறிவு வளர்ச்சிக்கும்,சமூக முன்னேற்றத்திற்கும், கலை கலாசார அபிவிருத்திற்கும் மிக்க இன்றியமையாதது.

உலக மக்களில் ஒரு பாதியினர் வாசிப்பதில் ஆர்வம் அற்றவர்களாக இருக்கின்ற பொழுது அதில் சிறு தொகுதியான மிக குறைவான மக்கள் தொகையினரே வாசிப்பதில் நிகழ்காலத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கூட வாசிப்பதில் ஆர்வம் காட்டுவது இப்பொழுது குறைவாகவே உள்ளது எனலாம்.

யார் ஒருவன் வாசிப்பதில், புதிய தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மறுக்கின்றானோ அவன் வாழ மறுக்கின்றான் என்றே கூற வேண்டும். இவ்வாறு இருக்கின்றவர்களின் மனது அறியாமையின் சிகரமாகவே காணப்படுவதோடு வாழ்க்கை இன்பம் அற்று தூசிப்படிந்த மனநிலையையே ஏற்படுத்தும்.

வாசிப்பின் தேவை அதன் முக்கியத்துவம், அதன் தனிச்சிறப்பு, மகத்துவம் என்பவற்றை ஒவ்வொரு மனிதனும் மனதார உணர்ந்து செயற்படும் பொழுதே அவன் மனிதனாக உருவெடுக்கின்றான்.

ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, அப்துல் கலாம், அம்பேத்கார் போன்றோர் வாசிப்பின் உன்னத நிலையை அடைந்தோர் என்பது யாவரும் அறிந்ததே. இவர்கள் போன்றோர் இன்று பேசப்படுவதற்கு அவர்களின் வாசிப்பும் முக்கிய இடம்பெறுகின்றது.

ஒருவர் தான் வாழ்நாளில் வாசிப்பினை மேற்கொள்ளும் பொழுது அவன் புதுப்பிக்கபடுகின்றான், அவனின் எண்ணங்கள், சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. புதிய முயற்சிகளில் ஈடுபடுகின்றான், தன்னை உலகம் அறிந்துக் கொள்வதற்கு முன்பு அவன் தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்த முயல்கின்றான், எல்லாவற்றிக்கும் மேலாக மனிதனாக வாழ முயற்சி செய்கின்றான். இவை யாவும் வாசிப்பு என்ற உணர்வோடு பொருந்திய  மருத்துவமே ஆகும்.

ஒரு மனிதனின் வாழ்வை வளமாக்குவது வாசிப்பு என்றால் அது மிகையாகாது. வாசிப்பு நாம் நமது உள்ளத்திற்கும் சிந்தனைக்கும் வழங்கப்படும் ஒரு வித பயிற்சியே ஆகும்.

ஆயகலைகள் போன்று வாசிப்பும் ஒரு கலை தான். இக்கலையை பல்வேறுப்பட்ட அறிஞர்கள் பலவிதமாக வகுத்துக்கூறியுள்ளளனர்.அந்த வகையில் 1972 ஆம் ஆண்டு தோமஸ் மற்றும் றொபின்ஷன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R என்ற முறையானது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும். இதன் மூலம் ஒரு புத்தகத்தை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது. அவை பின்வருமாறு,

- SURVEY (தேடிப்பார்த்தல்)
- QUATION (கேள்வி எழுப்புதல்)
- READ (வாசித்தல்)
- RETRIVE (மீளவும் பார்த்தல்)
- REVIEW (விமர்சித்தல்)

வாசிப்பு மாணவர்களின் கற்றலோடு எவ்வாறு தொடர்புறுகின்றது என்று பேராசிரியர் சபா.ஜெயராஜா நூலொன்றில் தன் கருத்துக்களை பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.வாசிப்பு கற்பித்தலில் அனைத்தையும் உள்ளடக்கிய செயல்முறையை பயன்படுத்துதலால் கூடிய பயன்விளைவுகள் எட்டப்படும். அதாவது வாசிப்போடு இணைந்த காண்பியங்கள், கலந்துரையாடல்கள், தூண்டுதலளிக்கும் போட்டிகள், எழுத்துப்பயிற்சிகள், ஒழுங்கமைந்த திறன் விருத்திகள் போன்றவைகள் ஒன்றிணைக்கப்படல் வேண்டும் என்றார்.

வாசிப்பு பல முக்கிய திறன்களை  தன்னகத்தே கொண்டதாகும்.அதாவது சிந்தனை செய்தல், கண்டறிதல், கற்பனை வளம், விவாதப்பாங்கு, நியாயம் கூறுதல், ஆராய்தல் போன்றவையாகும். அதே போல வாசிப்பு பல நோக்கங்களையும் கொண்டுள்ளது. அவை சந்தோசம், பொழுதுபோக்கு, ஓய்வுக்காக வாசித்தல், தகவல் சேகரிப்பு, தகவல் ஒழுங்கமைப்பு, தகவல் வெளியீடு மற்றும் அறிவு விருத்தி போன்ற பிரதான நோக்கங்களுக்காக வாசிப்பு மிக இன்றியமையாததாக காணப்படுகின்றது.

சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவற்கு வீடுகளில் சில வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற கூடிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு. அதாவது பாடசாலை ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும் என்று கூறுகின்ற பகுதிகளை பெற்றோர்கள் வாசிப்பதற்கு பிள்ளைகளுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். வீட்டில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை பயிற்சிகளை கொடுத்தல், தனது பிள்ளைகளுக்கு புத்தங்களை பரிசுப்பொருட்களாக பெற்றுக்கொடுத்து உற்சாகமூட்டுதல், பல்வேறு வாசிப்பு சாதனங்களை பயன்படுத்த பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குதல். நூலகத்தின் பெறுமதியை பிள்ளைகளுக்கு தினமும் உணர்த்தி அவர்களை நூலகதத்திற்கும் சென்று வாசிக்க வழிசமைக்க வேண்டும். சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். வர்ணமயமான புத்தகங்கள் பெற்றுக்கொடுக்கும் போது அவற்றின் அழகுகள் கூட பிள்ளைகளின் மனதை மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.

வாசிப்பின் நன்மைகள் எனும் பொழுது அதனால் ஏற்படும் அனுகூலங்ககளை வரையறுத்துக் கூறிவிட முடியாது. அதன் நன்மை அளப்பரியது. இருப்பினும் சில நன்மைகளை குறிப்பிடலாம்.

மன தூண்டுதுல் (Mentol Stimulation)

அதாவது வாசிப்பு பழக்கமானது மூளையை சுறுசுறுப்பாகவும், செயல்திறன் மிக்கதாகவும் வைத்திருப்தோடு அறிவாற்றல் இழப்பினை குறைக்கின்றது.

அழுத்தக் குறைப்பு (stress Reduction)

அதாவது ஒருவருக்கு அவனது வாழ்க்கையில் பல இன்னல்கள் அழுத்தங்கள் கட்டாயமாக இருக்கும். இதனால் மன அமைதின்மை நிகழும். இந்த சந்தர்ப்பங்களில் ஒரு சுவாரஸ்யமான கதை புத்தகத்தையொன்ற வாசிக்கும் பொழுது அவை அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

அறிவு பெருக்கம் (Knowledge)ம் வாசிக்கும் ஒவ்வொரு விடயமும் எமது அறிவு வீச்சின் தன்மையை புத்துருவாக்கம் செய்வதோடு அறிவை விருத்தி செய்யவும் உதவுகின்றது.

சொல்விரிவாக்கம் (Vacabulary Expention)

அதாவது நாங்கள் எவ்வளவு அதிகமாக வாசிக்கின்றோமோ அதே அளவு புதிய சொற்களை நாம் தெரிந்துகொள்கின்றோம். இது எம்மை அறியாமலே சொல் சார்ந்த வளத்தை பெற்றுத்தரும். சிறந்த பேச்சு வாண்மை எம்மைத் தேடி வரும். தெளிவாகமும், விரிவாகவும். தன்னம்பிக்கையுடனும் பேசலாம்.

நினைவு மேம்பாடு (Momory Improvement)

நினைவு மேம்பாடு என்கிற பொழுது வாசிப்பின் மூலம் இது எமது மூளையில் ஏற்படுகின்றது.அதாவது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆர்வத்துடன் கிரகித்துக் கொள்ள உதவுகின்றது,

வலுவான பகுப்பாய்வு சிந்தனை (Stronger Analytical Thinnking)

வாசிப்பு ஒருவருக்கு துப்பறியும் திறனை வளர்க்கின்றது. அதாவது எதிர்கால சிந்தனை, ஊகித்து அறியக்கூடிய ஆற்றல், விமர்சிக்கும் தன்மை என்பவற்றை வளர்க்கின்றது.

சிறந்த எழுத்துத் திறன்

வாசிப்பு ஒருவருக்கு சிறந்த எழுத்துத்திறனை உருவாக்குவதோடு சிறந்த படைப்புக்களை புதிய முறையில் வெளியிடவும் துணை புரியும்.

அமைதி (Tranquality)

ஒரு நல்ல புத்தகத்தை படிப்பதால் உங்கள் மன இறுக்கங்களை போக்குவதோடு மகத்தான உள் அமைதியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஜயகுமார் ஷான், மொனறாகலை


Add new comment

Or log in with...