உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சட்டத்தரணி உள்ளிட்ட மேலும் சிலர் கைது

Easter Attack-Lawyer Hejaaz Hizbullah and 3 Others Arrested-உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சட்டத்தரணி உள்ளிட்ட மேலும் சிலர் கைது

- சட்டத்தரணி ஒருவர்; சுங்கத் திணைக்கள அலுவலர் ஒருவர்
- CID யினால் 119 பேர்; TID யினால் 78 பேர் கைது

- CID யில் 40 பேர் தடுப்ப்பில்; TID யில் 52 பேர் தடுப்பில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணி உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய நேற்று (14), கைது செய்யப்பட்டவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எனும் சட்டத்தரணி ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மற்றும் மேலும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவர்களில் ஒருவர் சுங்கத் திணைக்களத்தில் பணி புரிவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இது தொடர்பில் தற்போது வரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 40 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 33 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன்,  தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் (TID) 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 52 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரியாஜ் பதியுதீன்
நேற்று (14) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், குண்டுதாரி ஒருவருடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார் எனவும், குண்டு வெடிப்புக்கு அண்மித்த காலத்தில் குண்டுதாரி ஒருவருடன் பிரபல ஹோட்டல் ஒன்றில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்
இதேவேளை கைது செய்யப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் தெரிவித்த அவர், சந்தேகநபர் இரு குண்டுதாரிகளுடன் தொடர்பில் இருந்தமை தொடர்பிலான தகவல்களுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசேட நலன்புரி சங்கமொன்றை அமைத்து, இந்த குண்டுதாரிகளுடன் இணைந்து அவரும் அதில் பொறுப்புகளை வகித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இத்தாக்குதல் தொடர்பிலான திட்டமிடல் தொடர்பில் ஒரு சில தொடர்புகள் காணப்படுவதாக தெரிய வருவதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவம் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் விடுபட்ட இடத்திலிருந்து தொடரப்பட்ட விசாரணைகளுக்கமையவே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட ஒருவரின் சங்கமொன்றுக்கு குண்டுதாரி ஒருவர் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவத்தார்.

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் அங்கம் வகிக்கும் அமைப்பிற்கு, குண்டுதாரிகளில் ஒருவர் காணியொன்றை வழங்கியுள்ளதாகவும், தற்போதும் அந்த காணியிலேயே அந்த அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.


Add new comment

Or log in with...