கொரோனாவிலிருந்து மீள ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 22 மில். யூரோ

கொரோனாவிலிருந்து மீள ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 22 மில். யூரோ-EU Grant 22 Million EUR to Sri Lanka-Support COVID19

- விவசாயத்திற்கு 16.5 மில்லியன் யூரோ
- சுற்றுலாத்துறைக்கு 3.5 மில்லியன் யூரோ
- சுகாதாரத்திற்கு 2 மில்லியன் யூரோ

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு 22 மில்லியன் யூரோக்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து மீளும் நடவடிக்கைகளுக்காக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் தற்போது வரை, மிகக் குறைந்தளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும் எனவும், இலங்கையின் முயற்சியை பாராட்டும் வகையில் நாட்டின் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்நிதி வழங்கப்படுதவாக அறிவித்துள்ளது.

சுகாதார நடவடிக்கைகளுக்காக, 2 மில்லியன் யூரோக்களுக்கான உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து உபகரணங்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்யவும் ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதற்கும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், விவசாய நடவடிக்கைகளுக்காக 16.5 மில்லியன் யூரோக்களை ஒதுக்குவதாகவும், அது தற்போதைய நிலையில், விற்பனை மற்றும் விநியோக சங்கிலியை பலப்படுத்த உதவும் என்பதோடு, நாட்டின் சனத்தொகையின் நலனுக்கான விவசாயம் மற்றும் சுகாதார நலன் கொண்ட விநியோகங்களுக்காக பயன்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் 3.5 மில்லியன் யூரோக்களை, சுற்றுலாத் துறைக்கு வழங்குவதாகவும், குறிப்பாக சிறிய சேவை வழங்குனர் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்காக இது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு சில உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் ஏனையவை ஆண்டின் இறுதிப் பகுதியிலும் அதனைத் தொடர்ந்து வரும் காலப் பகுதியிலும் மேற்கொள்ளப்படும் என, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...