உதாசீனத்தின் விளைவு!

இங்கிலாந்தின் அதிமுக்கிய பிரஜைகள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்குக் காரணங்கள் எவை?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா ஏற்பட்டதும், அவருக்கு முன்னதாக பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதும் அந்நாட்டை உலுக்கி உள்ளது.

அலட்சியம் என்ற ஒரு வார்த்தைதான் தற்போது லண்டனையும் முக்கியமாக அங்கு தலைவர்கள் இருக்கும் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியையும் சுற்றி வருகிறது. ஆம்... அலட்சியம் என்ற ஒன்றுதான் அங்கு மூன்று முக்கியமான தலைவர்களுக்கு கொரோனா ஏற்படக் காரணம்.

கொரோனா வைரஸ் பிரிட்டனில் மொத்தம் சுமார் 14600 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லண்டனில் மட்டும் 3920 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. பிரிட்டனில் லண்டன்தான் கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. லண்டனில் இன்னும் பலருக்கு  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அதிலும் லண்டனில் பாராளுமன்றம் இருக்கும் பகுதியும், பக்கிங்ஹாம் மாளிகை இருக்கும் பகுதியுமான வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் மட்டும் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலர் எம்.பிக்கள் வீட்டைச் சேர்ந்தவர்கள். சிலர் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். லண்டனில் எல்லோருக்கும் தெரிந்த வகையில் கொரோனா ஏற்பட்ட முதல் பெரிய நபர் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் நதீன் டோரீஸ். அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கே கொரோனா ஏற்பட்டுள்ளது என்பது நம்ப முடியாத செய்தியாகும்.

மார்ச் 2ம் திகதி இவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. ஆனாலும் இவர் அலட்சியமாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பலரை லண்டனில் சந்தித்தார். அதன் பின்னர் மார்ச் 11ம் திகதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மார்ச் 11ம் திகதி கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நதீன் டோரீஸ் போரிஸ் ஜோன்சனுடன் சந்திப்பு நடத்தினார். சுமார் 8 எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அந்தச் சந்திப்பில் அரச குடும்பத்தில் பணி செய்யும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் அலுவலக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நதீன் டோரீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், போரிஸ் ஜோன்சனுக்கு பாதுகாப்பு கருதி சோதனை செய்ய வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் போரிஸ் ஜோன்சன் தன்னை சோதனை செய்து கொள்ளவில்லை. இதெல்லாம் அரசியல் அழுத்தம் என்று கொரோனா விமர்சனங்களுக்கு அலட்சியமாக பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் வரிசையாக போரிஸ் ஜோன்சன் பல எம்.பிக்களைச் சந்தித்தார். தனக்கு கொரோனா வந்து இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் கூட அவர் அமைச்சர்களைச் சந்தித்தார். தன்னை ஒரு நாள் கூட அவர் வீட்டிற்கு உள்ளே வைத்துக் கொள்ளாமல் பொது இடங்களுக்குச் சென்றார். அலுவலக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மிக முக்கியமாக பக்கிங்ஹாம் மாளிகைக்குச் சென்று அரச குடும்பத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த நிலையில்தான்  அங்கு இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்னர் இளவரசர் சார்ள்சுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இளவரசர் மாளிகையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாளிகை மொத்தமும் மூடப்பட்டுள்ளது. எல்லோரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் இளவரசருக்கு கொரோனா ஏற்பட்டும் கூட, போரிஸ்  ஜோன்சன் இதில் தீவிரம் காட்டவில்லை. ஒரு பிரதமராக பிரிட்டனில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை. குறைந்தபட்சம் லண்டனில் கூட அவர் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை என்று பரவலாக குறை தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் போரிஸ்  ஜோன்சனும் வீட்டிற்கு உள்ளே இல்லாமல் தொடர்ந்து அலுவலக பணிகளை செய்து வந்தார். இறுதியில் போரிஸ்  ஜோன்சனுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மிகக் குறைவான அறிகுறிகள் மட்டுமே இருந்தன. இந்த மெல்லிய அறிகுறிகளுடன்தான் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.

சரியான தலைவராக அவர் முடிவுகளை எடுக்கவில்லை. பொறுப்பான குடிமகனாக கூட அவர் சரியாக செயல்படவில்லை. அவரின்  மனைவி கேரி சைமண்ட்ஸ் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் அவரும் கூட போரிஸ்  ஜோன்சன் உடன்தான் உள்ளார். போரிஸ்  ஜோன்சன் மூலம் அங்கு பாதுகாப்புத் துறை செயலாளர் மேட் ஹாங்காக் என்பவருக்கும் கொரோனா பரவி உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தற்போது போரிஸ்  ஜோன்சனுக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

நதீன் டோரீஸ் மூலம் அவருக்கு கொரோனா ஏற்பட்டதா, அலுவலக பணியாளர்கள் மூலம் கொரோனா ஏற்பட்டதாஇ மேட் ஹாங்காங் மூலம் கொரோனா பரவியதா? அல்லது இளவரசர் சார்ள்ஸ் மூலம் கொரோனா பரவியதா என்று கேள்வி எழுந்துள்ளது. இல்லை போரிஸ்  ஜோன்சன்தான் இவர்களுக்கு கொரோனாவை பரப்பினாரா என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.


Add new comment

Or log in with...