ஊரடங்கு இன்று மீண்டும் பி.ப. 2 மணி முதல் திங்கள் வரை நீடிப்பு (UPDATE) | தினகரன்


ஊரடங்கு இன்று மீண்டும் பி.ப. 2 மணி முதல் திங்கள் வரை நீடிப்பு (UPDATE)

ஊரடங்கு இன்று மீண்டும் பி.ப. 2 மணி முதல் திங்கள் வரை நீடிப்பு-Curfew Until Monday 30

யாழில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும்

தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு, மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பகுதிகளில் திங்கள் (30) 6.00 மணிக்கு இவ்வூரடங்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மிகவும் இடர் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (27) வெள்ளிக் கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (27) காலை 06.00 மணிக்கு நீக்கப்படவிருந்தது. எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டும் மறு அறிவித்தல் வரை அதனை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் பற்றிய இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.


Add new comment

Or log in with...