தொடரும் ஊரடங்கு; வியாழன், வெள்ளிக்கிழமை பற்றிய அறிவித்தல்

தொடரும் ஊரடங்கு; வியாழன், வெள்ளிக்கிழமை பற்றிய அறிவித்தல்-Curfew Announced Thursday and Friday

- மாவட்டங்களிடையே பயணிப்பது தடை
- விவசாயம், சிறு தோட்ட, ஏற்றுமதி பயிர்ச் செய்கைக்கு அனுமதி
- ஊடகம், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி
- விமான பயணிகள், துறைமுக சேவைக்கு அனுமதி

  • கொழும்பு, கம்பஹா, களுத்துறை: மீள அறிவிக்கும் வரை
  • வட மாகாணம், புத்தளம்: வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணிக்கு நீக்கம்; நண்பகல் 12 மணிக்கு அமுல்
  • ஏனைய இடங்கள்: நாளை (27) காலை 6 மணிக்கு நீக்கம்; நண்பகல் 12 மணிக்கு அமுல்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுதல் மற்றும் மீண்டும் அமுல்படுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும்.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் வெள்ளிக்கிழமை (27) முற்பகல் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (26) வியாழன் முற்பகல் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

மாவட்டங்களிடையே பயணிப்பது தடை
நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் செய்வது தொடர்ந்தும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

விவசாயம், சிறு தோட்ட, ஏற்றுமதி பயிர்ச் செய்கைக்கு அனுமதி
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், சிறு தேயிலை தோட்ட, ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊடகம், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி
ஊடக சேவைக்காகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகள், துறைமுக சேவைக்கு அனுமதி
விமானப் பயணிகளுக்காக விமான நிலையங்களுக்கும் துறைமுக சேவைகளையும் பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...