போர்க் கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார் டிரம்ப் | தினகரன்


போர்க் கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார் டிரம்ப்

தம்மை போர்க் கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கொரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா முழு வெற்றியை பெறும் என்று உறுதி அளித்துள்ளார்.

கொரிய போர் காலத்தைப் போன்று அமெரிக்கா முக்கிய மருத்துவ உற்பத்திகளை வேகப்படுத்துவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்முறை இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்கு 9,300 க்கும் அதிகமானவர்கள் உள்ளாகியிருப்பதோடு 150 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வைரஸுக்கு எதிராக போராடுவதை ஒரு போராக கருதுவது பற்றி டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது “இது ஒரு போர்” என்று வலியுறுத்திய அவர், “நான் ஒரு போர்க்கால ஜனாதிபதியாகவே பார்க்கிறேன்” என்றார்.

தேசிய பாதுகாப்பிற்கு அவசியமான உற்பத்திகளுக்கான உத்தரவுகளை பிறப்பிக்க உதவும் பொது விடயங்களில் ஜனாதிபதி தலையிட அதிகாரம் வழங்கும் 1950 பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தில் தாம் கைச்சாத்திடவிருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவுக்கும்- சோவியட் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சட்டம், அரசுக்கு போர்க்கால அதிகாரங்களை வழங்குகிறது. ஆனால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடைந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பின்னர் ட்விட்டரில் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...