மலைக் காடுகளை தீக்கிரையாக்கினால் மக்கள் வாழ்வதற்கு எங்கே செல்வது?

இன்றைய வரட்சியான காலநிலை மலையகத்திலும் தொடர்கின்றது.இக்காலத்தில் மலையகத்தில் காடுகளுக்குத் தீவைக்கும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.அதனால் பசுமையான புற்றரைகள், காடுகள் அழிகின்றன. இதனால் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

 மலையகம் என்பது மலைப்பாங்கான பசுமை நிறைந்த பிரதேசமாகும்.இந்தப் பிரதேசத்தில் காணப்படும் இயற்கையான காடுகள்,புல்வெளிகள்,பற்றைக் காடுகள்,பைனஸ் மரக் காடுகள், தேயிலைச் செடிகள் என்பன மலையகத்துக்கு அழகு தருகின்றன. 

பொதுவாக மலையகத்தில் மார்கழி என்றாலே பனி பொழியும். இதன் போது பகலில் கடுமையான வெப்ப நிலையான காலநிலை நிலவும்.இது தொடர்ச்சியாக தைமாதம் வரை தொடரும்.இது மலையகத்தில் வழமையாக நிலவும் காலநிலையாகும்.இதன் போது இப்பிரதேசத்தில் கடுமையான உஷ்ணம் பகலில் நிலவுவதால் விஷமிகள் காடுகள்,புல்வெளிகள்,பற்றைக் காடுகள்,பைனஸ் மரக்காடுகள்,  தேயிலைச் செடிகள் என்பவற்றுக்கு தீயை மூட்டுகின்றனர்.இதன் காரணமாக அவை எரிந்து நாசமடைந்து விடுகின்றன.

அத்துடன் இயற்கையான காடுகள்,புல்வெளிகள்,பற்றைக் காடுகள் போன்றவற்றில் வாழும் உயிரினங்கள் தீயினால் அழிந்து போகின்றன.அது மாத்திரமன்றி இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுகின்றது.குறிப்பாக மலைப் பிரதேசத்தில் இருந்தே மக்கள் தமக்கான குடிநீரை பெற்றுக் கொள்கின்றனர்.அவ்வாறு மலைப் பிரதேசத்தின் நீரைக் கொண்டு வரும் குழாய்களும் தீயினால் எரிந்து நாசமடைவதால் மக்களுக்கான நீர் விநியோகமும் தடைப்படுகின்றது.

 மனிதனது இச்செயற்பாடுகள் காரணமாக மலையகத்தில் வழமையான காலநிலை மாற்றமடைகின்றது. குறிப்பாக மலையகத்தில் தைமாதம் அதன் பின் வரும் மாசி மாதத்தில் முழுமையான மழை கிடைத்து விடும். இருப்பினும் தற்போ​ைதய நிலையில் மலையகத்தில் வரட்சிதான் நீடிக்கின்றது.

மலையகத்தில் தற்போது ஒரளவாவது மழை கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் கருமுகில்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை பெய்யவில்லை. அவ்வாறு மழை பெய்தாலும் 5அல்லது 10நிமிடங்கள் மாத்திரமே பெய்கின்றது.

மலையகத்தில் பண்பாட்டு ரீதியில் ஒரு விஷேடம் காணப்படுகின்றது.அதில் மாசி மாதம் காமன் பண்டிகை இடம்பெற்று தொடர்ந்து வரும் காலத்தில் மாரியம்மனுக்கான திருவிழா இடம்பெறும். தற்போது ஒரு சில தோட்டங்களில் திருவிழா இடம்பெற்று  முடிந்து விட்ட போதிலும் இன்னும் மழை கிடைக்கவில்லை. மாரியம்மன் தெய்வத்திற்காக எடுக்கப்படும் திருவிழாவானது மழை வேண்டி எடுக்கப்படும் திருவிழாவாகும்.

மலையக மக்களது நம்பிக்கை திருவிழாவாகும். இக்காலத்தில் எப்படியோ மழை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையிலேயே திருவிழாவையும் மிகச் சிறப்பாக கொண்டாடுவர். ஆனால் அந்த நம்பிக்கை இருந்தும் கூட இன்னும் மழை பெய்யவில்லை.

இவர்கள் நம்பியிருக்கம் தொழில் தேயிலைத் தொழிலாகும். இந்த தேயிலை செடிகளுக்கு நீரும் அவசியமானது.தற்போது பல தோட்டங்களில் தேயிலைச் செடிகள் கருகிச் செல்கின்றன.இதனால் பெண் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது குறைந்து சென்று விடும். அது இவர்களது குடும்ப பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

 காடுகள் நீர் வளத்தைத் தருகின்றன.அது மாத்திரமன்றி வரட்சி ஏற்படாமலும் தடுக்கின்றன. இதனைக் கருத்திற் கொண்டு இயற்கையான காடுகள்,புல்வெளிகள்,பற்றைக் காடுகள்,பைனஸ் மரக்காடுகள்,  தேயிலைச் செடிகள் ஆகியவவற்றை விஷமிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு முன்வருவோம்.

இரா.யோகேசன்...
கினிகத்தேனை


Add new comment

Or log in with...