தேர்தல் பரபரப்பை பின்தள்ளிய கொரோனா! | தினகரன்


தேர்தல் பரபரப்பை பின்தள்ளிய கொரோனா!

கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை. திட்டமிட்டவாறு பாராளுமன்றத் தேர்தல் நடக்கும். அறிவிக்கப்பட்டபடி உரிய காலப் பகுதியில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்” என்று அறிவித்திருக்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய.

“பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அரச பணிமனைகள் பல இயங்கவில்லை. இந்த நிலையில் எப்படித் தேர்தலை நடத்துவது? ஆகவே பாராளுமன்றத் தேர்தலை ஒத்தி வையுங்கள்” என்று கேட்டிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரும். ஜே.வி.பியும் ஒத்திவைக்க கோரப் போவதாக செய்தியொன்று வந்துள்ளது. இனி இதேபோல ஏனைய தரப்புகளும் கோரிக்கை விடுக்கக் கூடும்.

அப்படியென்றால், திட்டமிடப்பட்ட திகதியில் தேர்தல் நடக்குமா? இல்லையா?

உண்மையில் இதைப் பற்றி யாருக்குமே தெரியாது. ஏனென்றால் கொரோனா நாளுக்கு நாள் புதிய புதிய நிலைமைகளை உலகெங்கும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதிலும் கொரோனா அச்சம் பரவியிருக்கிறது.

ஐரோப்பா இயல்பு நிலையை இழந்து ஏறக்குறைய பதுங்கு குழிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மகாராணியார் பாதுகாப்பு கருதி அரண்மனையை விட்டு பாதுகாப்பான மற்றொரு மாளிகைக்குச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் வெளியுறவுத்துறை அமைச்சரையும், பிரித்தானியாவில் சுகாதார அமைச்சரையும், கனடாவில் பிரதமரின் துணைவியையும் கூட கொரோனா தொற்றியிருக்கிறது.

ஆசிய நாடுகளில் பரவலாகக் கொரோனோ தொற்றியதோ இல்லையோ, பதற்றம் தொற்றியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் சுமார் 45கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்.

இது மேலும் அதிகரிக்காமலிருப்பதற்காக நாடு முழுவதிலும் கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களிடமும் தேர்தல் பற்றிய பேச்சை விடவும் கொரோனாவைப் பற்றிய பேச்சே அதிகமாக உள்ளது.

ஊடகங்களின் கவனமும் கொரோனாவிலேயே மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில்தான் நாம் தேர்தல் குறித்தும் எதிர்கால அரசியல் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.“கொரோனாவை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விளைகிறது பிரான்ஸ் அரசாங்கம்” என்கின்றனர் அங்குள்ள அரசியல் அவதானிகள். 

 அவர்கள் சொல்வதைப் போல பிரான்ஸில் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் நடந்து வந்தன. இதனை எதிர்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையாகச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. பொலிசை ஏவி மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்தி வந்த அரசாங்கத்துக்கு கொரோனா அச்சம் வாய்ப்பாகி விட்டது.

'மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேலாக அனைத்து நடவடிக்கைகளும் முடக்கமாகின்றன. பயணங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுகின்றன' என அறிவித்திருக்கிறது பிரான்ஸ் அரசாங்கம். இதனால், அரசாங்கத்தின் மீதான நெருக்கடி தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதைப் போல இலங்கையிலும் கொரோனாவை அவரவர் தத்தம் நலனுக்காகப் பயன்படுத்த விளைகிறதாக ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இயல்பற்ற நிலையில் எப்படித் தேர்தலை நடத்துவது? மக்கள் கூடவே முடியாத சூழலில் பரப்புரைகளைச் செய்வது என்று கேட்கிறார் சஜித் பிரேமதாச.

தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் ஆதரவு வீழ்ச்சியையும் சரிக்கட்டிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே அதற்கு கொரோனாவைக் காரணம் காட்டி, கால நீட்சியை அது எதிர்பார்க்கிறது என்கின்றனர் தமிழ்த் தரப்பிலுள்ள அரசியல் அவதானிகள்.

இது முற்றிலும் உண்மை என்கின்றனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோர்.

அப்படியென்றால், மனோ கணேசன் போன்றோர் எதற்காக கொரோனாவை முன்னிறுத்தி தேர்தலை ஒத்திவைக்கக் கோருகிறார்கள் என்றால், அங்கேயும் பிரச்சினையே. ஐ.தே.க இரண்டாகப் பிளவுண்டிருப்பதைச் சீர்ப்படுத்திக் கொள்வதற்கு ஒரு கால அவகாசம் கிடைத்தால் நல்லது என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர் சிலர்.

இதிலும் ஓரளவு உண்மை உண்டே. ஆனாலும் அதற்கும் அப்பால் இயல்பற்ற நிலை, பதற்றம் போன்றவற்றின் மத்தியில் தேர்தலை நடத்த முடியுமா என்பது கேள்வியே.

இந்தக் கேள்வி தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் இருக்கும். ஜனாதிபதியிடமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவர்கள் இதற்குப் பொருத்தமான முறையில்தான் இறுதித் தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் நம்பலாம்.

ஆனாலும் இப்போது தமக்கு வாய்ப்பானதொரு வெற்றிச் சூழல் உள்ளதால் அதைப் பற்றியே பொதுஜன பெரமுனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் முதன்மையளித்துச் சிந்திக்கும் எனச் சிலர் கூறுகிறார்கள்.

எதுவானாலும் அரசாங்கமொன்றை விரைவில் அமைக்க வேண்டிய பொறுப்புண்டு. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்திரமற்ற அரசியற் சூழலும் அரசாங்கமும் இருந்து வருகின்றன. இதனை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. எனவே விரைவில் ஒரு புதிய – உறுதியான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிலை. எனவேதான் கொரோனாவின் மத்தியிலும் தேர்தலைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது என்பது சிலருடைய வாதம்.

இதுவும் தவிர்க்க முடியாத ஒரு நியாயமே.

ஆக மொத்தத்தில் இப்பொழுது அடுத்ததாக என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு குழப்ப நிலையே காணப்படுகிறது. இதை இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது ஒரு வாரம் பொறுத்துப் பார்த்தாலே சரியாக மதிப்பிடக் கூடியதாக இருக்கும்.

வெளிநாடுகளுக்கான விமான சேவைகளே மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், உலகளாவிய அளவில் ஏற்பட்டிருக்கும் ஒரு அபாய நிலையில் எதற்கும் அவசரப்பட முடியாது.

ஆனாலும் கட்சிகள் தமது நடவடிக்கைகளில் தீவிரமாகவே உள்ளன. குறிப்பிட்டவாறு அவை தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரித்துள்ளன.

உள்ளகமாகப் பரப்புரைகளை ஆரம்பித்துமிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஒன்றைத்தான் அது எப்போதும் உருப்படியாகச் செய்து வருவதால் அதில் அது முழுக்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார் ஒரு ஊடகவியலாளர்.

ஈ.பி.டி.பியும் முனைப்புக் காட்டியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் பணிகளுக்காக கிழக்கு மாகாணத்தில் நிற்கிறார். சில இடங்களில் வேட்பாளர் அறிமுகச் சுவரொட்டிகள் கூட ஒட்டப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் அணி, கஜேந்திரகுமார் அணி போன்றவற்றின் சத்தத்தைக் காணவில்லை. ஒரு சில இடங்களில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட்ட காட்சிகளை ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பான முகப்புத்தகங்களில் காணக் கூடியதாக இருந்தது. அவ்வளவுதான்.

முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியின் சுவரொட்டிகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் காணக் கூடியதாக உள்ளது.

கிழக்கில் முஸ்லிம் அணிகள் இன்னமும் தீவிர மந்திராலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை நேரிலேயே அவதானிக்க முடிகிறது.மலையகத்திலும் வேட்பாளர்கள் தெரிவில் குழப்பங்கள் முடியவில்லை. நீடிக்கின்றன.

எனவே தேர்தலும் கொரோனாவும் இன்று குழப்பங்களையே உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

உலகையே ஸ்தம்பிதமடையச் செய்துள்ள கொரோனா, இலங்கையையும் அது நடத்த விளைகின்ற தேர்தலையும் விட்டு வைக்குமா என்கிறார் ஒருவர்.எப்படியோ கொரோனா சில தரப்புகளுக்கு வாய்ப்பாகியுள்ளது. பலருக்கு அபாயமாகியிருக்கிறது. உலகத்துக்கு பயங்கரமான அச்சுறுத்தலாக உள்ளது.

இப்படிப் பலவிதமான தோற்றத்தில் இருக்கும் கொவிட் 19என்ற கொரோனா இலங்கையில் என்ன வகையான தாக்கத்தை உண்டாக்கப் போகிறது? கட்டுக்குள் நின்றொழியுமா? அல்லது கட்டுமீறித் தலையெடுத்தாடுமா? தேர்தலை அது பாதிக்குமா? ஆட்சியொன்றை அமைப்பதற்கு அது உண்டாக்கப் போகும் செல்வாக்கென்ன? தாக்கங்கள் என்ன?

இதையெல்லாம் அடுத்து வரவுள்ள வாரங்களே தீர்மானிக்கப் போகின்றன.

கருணாகரன்


Add new comment

Or log in with...