கொரோனாவை தோற்கடிக்க இலங்கை துணிச்சலுடன் களத்தில்!

சீனாவின் வுஹான் மாநிலத்தில் உருவான கொரோனா(COVID 19) வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் தொற்றுநோயாக உருவெடுத்து இலங்கையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.  

உலக சுகாதார நிறுவனத்தினால் 'COVID 19' என உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 162நாடுகளுக்குப் பரவியிருப்பதுடன், இதுவரை 7071பேர் இத்தொற்று காரணமாக நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  

இந்நோய்த் தாக்கம் இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் நாட்டு மக்கள் அனைவரும் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நோய்த் தொற்று வீதம் குறைவென்றே கூற வேண்டும். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி இலங்கையில் சுமார்45  பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், மேலும் 212பேர் நோய்த் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர். 

இதேவேளை 2000இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

 இலங்கையைப் பொறுத்தவரையில் அண்மித்த தசாப்தங்களில் இவ்வாறானதொரு பாரிய நோய்த் தொற்றுக்கு முகங்கொடுக்கும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் பலம் மிக்க சுகாதாரத் துறையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கைக்கு இதுவொரு சவால் நிறைந்த காலமாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.  

சீனாவை கொரோனா நோய்த் தொற்று ஆட்கொண்டிருந்த நிலையில், அதுபற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் இலங்கையில் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இருந்த போதும் வெப்பம் அதிகமான நாடுகளை கொரோனா வைரஸ் தாக்குவது குறைவாகவே இருக்கும் என்று ஒரு சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பலர் அலட்சியமாக இருந்ததையும் மறந்து விட முடியாது. இவ்வாறான ஆதாரமற்ற நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவியது அறிவீனமென்றே கொள்ள வேண்டும். இந்த அறிவீனமே நிலைமையை மோசமடையச் செய்து விட்டது என்றும் பலர் கூறுகின்றனர். 

சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய இலங்கையர்களின் ஊடாகவே எமது நாட்டுக்குள் கொரோனா வைரஸ் கொண்டு வரப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. விமான நிலையங்களில் பயணிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் சீன சுற்றுலாப் பயணிகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது. 

ஆனால், கொரேனா வைரஸ் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் திடீரெனப் பரவத் தொடங்கியமைதான் இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எமது நாட்டின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் இத்தாலியில் வாழ்கின்றனர். சிங்கள_ தமிழ் சித்திரைப் புத்தாண்டு, பொதுத் தேர்தல் போன்ற காரணங்களுக்காக பலர் நாடு திரும்பத் தொடங்கினர். அவ்வாறு வந்தவர்களில் அதிகமானோரே கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.  

 இலங்கையரான முதலாவது கொரோனா தொற்றுநோயாளியாக இத்தாலியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக செயற்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இவருக்கு எதிரான தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 

 இவ்வாறான நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பும் வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்த போது பிரதேச மக்கள் தெரிவித்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அவ்வாறான நிலையங்களை ஆரம்பிக்கும் பணிகளிலும் சில தாமதங்கள் ஏற்பட்டன.  

ஆனால் மக்களின் எதிர்ப்பையும் சமாளித்து கந்தகாடு இராணுவ முகாம், ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கம்பஸ், வவுனியா முகாம் என பல இடங்களில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைத்து நோய்த் தொற்றை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுவிடயத்தில் பாதுகாப்புப் படையினர் எடுத்த முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவையாகும். 

 பதவியேற்று நான்கு மாதங்களுக்குள் இவ்வாறான அவசர நிலையொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை ஜனாதிபதி சரியாக நிர்வகித்து வருகின்றார். முன்னர் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புத் துறையினரை பயன்படுத்துவதற்கு எடுத்த தீர்மானம் சகல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் பராமரிக்கும் முழுமையான பொறுப்பும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, உணவு வழங்குவது, அவர்கள் பயன்படுத்திய ரிஷுக்கள் உள்ளிட்ட கழிவுகளை உரிய முறையில் அகற்றுவது போன்ற சகல செயற்பாடுகளையும் இராணுவத்தினரே முன்னெடுத்து வருகின்றனர். படையினரின் நடவடிக்ைகயில் சில கடுமையாக இருந்தாலும் அவை இன்றைய நிலையில் தவிர்க்க முடியாதவையாகும். நோய் பரவுவதைத் தடுப்பதில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பான சேவையை மக்கள் பகிரங்கமாகவே பாராட்டுகின்றனர்.  

 இதேவேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு விடயங்களில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பொதுவிடுமுறைகளை அரசாங்கம் விடுத்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள் யாவும் மூடப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்களைத் தவிர்க்கும் வகையில் பொது விடுமுறையையும் அரசு வழங்கியுள்ளது. குறிப்பாக பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் என சகலவற்றையும் மூடுவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகவும் பாராட்டத்தக்கது என்பது மாத்திரமன்றி முன்னேற்பாடான செயற்பாடாகவும் உள்ளது. 

 தேர்தல் காலம் என்பதால் அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அரசு என்ற ரீதியில் மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நோயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனும் தம்மைப் பற்றியும் தம்மை சுற்றியுள்ளவர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.  

இத்தாலியிலிருந்து வந்த இரு இலங்கையர் தமக்கிருந்த காய்ச்சலை மறைத்து தனிமைப்படுத்தல் முகாமுக்குச் செல்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இறுதியில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை விடவும் மற்றுமொரு இரத்தினக்கல் வியாபாரி நோய் தொற்று இருந்தும் அதனை மறைத்து சிகிச்சை பெற்றக் கொள்ளாமல் 3நாட்கள் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார். இது தவிர மார்ச் 1ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதி வரையான காலப் பகுதியில் நாட்டுக்குள் 700இற்கும் அதிகமானவர்கள் இத்தாலி, கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ளனர். இவர்கள் எவரும் உரிய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவில்லை. இவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். இதுபோன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அப்பால் நம்மை நாமே பாதுகாப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். 

அதேநேரம், கொரோனாவின் தாக்கம் பற்றி புரிந்து கொள்ளாது முகப் புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதனை வேடிக்கையாக்குவது, பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை குழப்புவது போன்ற செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ள போதும், நமக்கு காணப்படும் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் பொறுப்புடன் செயற்படுவதும் அவசியமாகும். 

 வெறுமனே அரசாங்கத்தை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருக்காது அனைவரும் ஒன்றிணைந்து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதே காலத்தின் கட்டாயமாகும்.

சாரங்கன்


Add new comment

Or log in with...