நண்பகலுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!

நண்பகலுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!-Nomination Process Closed Noon

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கும், கட்டுப் பணம் செலுத்துவதற்குமான காலக்கெடு இன்று (19) நண்பகலுடன் நிறைவடைகின்றது.

இக்காலப் பகுதியை அடுத்து, வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் வேட்புமனுக்களை ஒப்படைக்கவுள்ளன.

புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை ஐ.தே.க. நேற்று சமர்ப்பித்திருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, மொணராகலை, பதுளை, கேகாலை, அநுராதபுரம், அம்பாந்தோட்டை, வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது. இன்றையதினம் அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்புமனுக்களையும் அக்கட்சி சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 14 தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை  சமர்ப்பித்துள்ளதோடு, ஏனைய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை இன்று ஒப்படைக்கப்பவுள்ளது.

அத்துடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான், ஶ்ரீ.ல.பொ.பெரமுன கூட்டணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தில் அவர் போட்டியிடுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இருப்பினும், அவருக்கு தேசியப்பட்டியலிலேயே இடம் வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...