மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சட்டசபை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடந்த 10-ஆம் திகதி கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர். இது தொடர்பாக அவர்கள் கவர்னருக்கும் சபாநாயகருக்கும் கடிதங்கள் அனுப்பிவந்தனர்.

230 இடங்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள், சுயேச்சை எம்.எல்.ஏக்கள் 4 பேர் என 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.

22 எம்.எல்.ஏக்கள் இராஜினாமாவைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் அரசு சிறுபான்மை அரசாக மாறியது. நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் லால்ஜி தாண்டனை முதல்-மந்திரி கமல்நாத் 13-ந் திகதி சந்தித்துப் பேசினார்.

அப்போது முதல்-மந்திரி கமல்நாத், 16-ந் திகதி (நேற்று) சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி தாண்டன் உத்தரவிட்டார்.

இதற்கு மத்தியில் இமாரதிதேவி, துளசி சிலாவத் உட்பட 6 மந்திரிகளின் ராஜினாமாக்களை சட்டசபை சபாநாயகர் பிரஜாபதி ஏற்றுக்கொண்டு விட்டார். அதே நேரத்தில் பெங்களூரில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களின் இராஜினாமா மீது அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஜெய்ப்பூர் சென்றிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினம் போபாலுக்கு விமானம் மூலம் திரும்பினர். இதே போன்று அரியானா மாநிலம் குருகிராமில் முகாமிட்டிருந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களும் போபாலுக்கு திரும்பினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இராஜினாமா ஏற்கப்படாத அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேரும் சபைக்கு வரவில்லை. கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று ஆளுநர் லால்ஜி தாண்டன் உரையாற்றினார். ஆனால் ஒரு நிமிடம் மட்டுமே உரையாற்றிய அவர், உடனடியாக அவையில் இருந்து வெளியேறினார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியலமைப்பு மரபுகளை பின்பற்றவும் ஜனநாயகத்தின் கண்ணியத்தை பராமரிக்கவும் மாநிலத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் அமைதியாக செயல்படவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார். அவர் வெளியேறியபின்னர் ஆளுநரின் உத்தரவின்படி சட்டமன்றத்தில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.

அதேசமயம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பான விவகாரத்தை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கோவிந்த் சிங் எழுப்பினார். மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற சபாநாயகர், சட்டசபையை மார்ச் 26-ம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதன்மூலம் ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முதல்வர் கமல்நாத்துக்கு போதிய அவகாசம் கிடைத்துள்ளது.


Add new comment

Or log in with...