பெண்ணுக்கு பொருத்திய ஆண் கைகள் நிறம் மாறியதால் டொக்டர்கள் வியப்பு | தினகரன்


பெண்ணுக்கு பொருத்திய ஆண் கைகள் நிறம் மாறியதால் டொக்டர்கள் வியப்பு

மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட ஆணின் கைகளின் நிறம் மாறியுள்ளது. இது டொக்டர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் 2016ம் ஆண்டு ஷ்ரேயா சித்தனகவுடர் என்ற இளம்பெண் வீதி விபத்தில் தன் இரு கைகளையும் இழந்தார். அந்த சமயம் மூளை சாவு அடைந்த சச்சின் என்ற இளைஞரின் கைகள் ஷ்ரேயாவுக்கு தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 36 டொக்டர்கள் அடங்கிய குழுவினரால் ஷ்ரேயாவுக்கு, அந்த இளைஞரின் கைகள் பொருத்தப்பட்டன. ஆசியாவிலேயே ஆணின் கைகளை பெண்ணுக்கு பொருத்தி செய்த முதல் அறுவை சிகிச்சை இது.

இந்நிலையில் ஷ்ரேயாவுக்கு பொருத்தப்பட்டுள்ள கைகளின் நிறம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மாறியுள்ளது. ஷ்ரேயாவின் உடல் நிறத்திற்கு ஏற்ப அந்த கைகளும் நிறம் மாறியுள்ளது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ள டொக்டர்கள் 'கைகளின் நிறம் மாறுவதற்கான அறிவியல் ரீதியிலான விளக்கத்தை வழங்குவது கடினம்' என கூறினர்.

கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் கை களை இழந்திருந்த மனு என்ற ரிக்ஷா சாரதிக்கும் அப்துல் ரஹீம் என்ற ஆப்கானிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் இன்னொருவரின் கைகள் பொருத்தப்பட்டன. அவர்கள் இருவரின் கைகளும் அடுத்த சில ஆண்டுகளில் நிறம் மாறின. ஆனால் பொருத்தப்பட்டவர்களின் நிறத்துக்கு ஒத்ததாகவே நிறம் மாறியிருந்தது. தற்போது, ஷ்ரேயாவுக்கு பொருத்தப்பட்டு உள்ள கைகளின் நிறம், அவரது தோலின் நிறத்துக்கு ஏற்ப முழுமையாக மாறியுள்ளது.


Add new comment

Or log in with...