மருத்துவ சாதனைகளுக்கு கொவிட் - 19 பெரும் சவால் | தினகரன்


மருத்துவ சாதனைகளுக்கு கொவிட் - 19 பெரும் சவால்

மனிதனுக்கு வந்து சேர்ந்தது எவ்வாறு?

உஷ்ண காலநிலைக்கும் கொரோனாவுக்கும் இடையிலான உறவு

சீன தொற்று நோயியல் நிபுணர்களின் அனுபவம், அவதானிப்புக்கள்   

கொவிட்-19என்கிற கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.  

உலகலாவிய நிலைமை  

2019டிசம்பர் மாதத்தின் நடுப்பதில் சீனாவின் உஹான் மாநிலத்தில் தோற்றம் பெற்ற இவ்வைரஸ் குருகிய காலப்பகுதியில் சீனாவில் மாத்திரமல்லாமல் சீனாவுக்கு வெளியே 110க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பதிவாகத் தொடங்கிவிட்டது.  

அந்த வகையில் கடந்த இரண்டரை மாதகாலப்பகுதியில் இவ்வைரஸ் ஒரு இலட்சத்து 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. அவர்களில் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சீனர்களாவர். என்றாலும் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 66ஆயிரம் பேர் முழுமையாக குணமடைந்துள்ள போதிலும் 4300க்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.  

சீனாவுக்கு வெளியே இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இவ்வைரஸ் தற்போது தீவிரமடைந்திருக்கின்றது. பிரித்தானிய சுகாதார அமைச்சர், பிரான்ஸ் கலாசார அமைச்சர், ஈரான் சுகாதார பிரதியமைச்சர் என்றபடி பாதித்திருக்கும் இவ்வைரஸ், ஈரானில் இரண்டு எம்.பிக்களதும், இவ்வைரஸ் தொற்றாளர்களுககு சிகிச்சை அளித்த இரண்டு சீன மருத்தவர்களதும் மரணத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது.  

இவ்வாறான நிலையில் இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்குள் வருகை தருபவர்களை 14நாட்கள் தங்க வைத்து கண்காணிக்கும் நடவடிக்கையை இலங்கை சுகாதாரத் துறையினர் இவ்வாரம் ஆரம்பித்துள்ளதோடு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களையும் விரிவுபடுத்தியுள்ளனர்.  

மனிதனை அடைந்த வழி?  

ஆனாலும் மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் இவ்வைரஸ் எவ்வாறு தோற்றம் பெற்றது? அது மனிதனுக்கு மனிதன் தொற்றி பரவும் நிலையை எவ்வாறு அடைந்தது? என்பது தொடர்பில் இன்னும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. ஆனால் இது தொடர்பில் பல கதைகள் நிலவுகின்றன.   அதாவது 'சிபெட் என்ற ஓருவகைப் பூனையின் இறைச்சியில் காணப்படும் வைரஸ் இது' என்றும் 'அப்பூனையின் இறைச்சியை சாப்பிட்டதால் இவ்வைரஸ் மனிதனுக்கு தொற்றியது' என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர், 'இது வெளவாலில் காணப்படும் வைரஸ்' என்றும் 'அதன் இறைச்சியை உணவாகக் கொண்டால் அவ்வைரஸ் மனிதனுக்கு தொற்றியது' என்றும் 'நோய் வாய்ப்பட்ட வெளவாலை உண்ட பாம்பின் இறைச்சியை மனிதன் உணவாகக் கொண்டதால் இவ்வைரஸ் மனிதனுக்கு தொற்றியது' என்றும் கூறப்படுகிறது.  

அத்தோடு கனடாவின் வைரஸ் ஆய்வுகூடமொன்றில் அதி தீவிர கண்காணிப்பில் பரீட்சிக்கப்பட்டு வந்த இவ்வைரஸ் கடத்தி செல்லப்பட்ட போதிலும் அது உரிய பாதுகாப்புடன் கையாளப்படாததால் இது மக்கள் மத்தியில் பரவும் நிலையை அடைந்தது என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலும் காணப்படவே செய்கின்றது. ஆனால் இவ்வைரஸ் மனிதனுக்கு எவ்வாறு தொற்றியது என்பதற்கான தெளிவான உறுதிமிக்க சான்று இன்னும் கண்டறியப்படவில்லை.  

இருப்பினும் இவ்வைரஸ் தொற்றுக்குள்ளானவர் இருமும் போதும் தும்மும் போதும் வெளிப்படும் சளித்துகள்கள் ஊடாக இது ஆளுக்காள் பரவுவதாக நம்பப்படுகின்றது. அது தொடர்பிலும் சந்தேகங்கள் நிலவே செய்கின்றன.  

இவ்வாறான நிலையில் கொவிட் - 19வைரஸை கையாளும் அனுபவம் இல்லாதுள்ளது என அறிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா பரவுதலை உலகலாவிய தொற்றாக அறிவித்திருக்கின்றது.  

என்றாலும் இக்கொரோனா வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்துவரும் சிங்கப்பூரின் நான்கு பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் இவ்வைரஸ் ஆய்வு தொடர்பில் முக்கிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளனர். அவர்களது தகவல்களின் படி, 'இவ்வைரஸ் ஒன்றில் இவ்வருட இறுதி வரையும் இதே நிலையில் நீடித்து பெருந்தொகையானோரைப் பாதித்து ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக அமையலாம். இல்லாவிடில் சார்ஸ் வைரஸ் போன்று திடீரென காணாமல் போய்விடலாம். அதுவும் இல்லாவிட்டால் எச்1என்1வைரஸ் போன்று மனித வாழ்வுடன் இசைவாக்கம் அடைந்து விடலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.  

வைரஸின் தன்மை  

ஆனால் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் தொற்று நோயியல் நிபுணர்கள் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இவ்வைரஸ் தொடர்பில் பின்வரும் விடயங்களை உலகின் முன்வைத்துள்ளனர்.   அதாவது இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளரிடமிருந்து வைரஸ் வெளிப்படுமாயின் அது சுமார் 30நிமிடங்கள் வரையில் காற்றில் உயிரோடு இருக்க முடியும். இவ்வாறு வெளியாகும் இவ்வைரஸ் சுமார் 15அடிகள் தூரம் வரை காற்றில் பயணிக்கலாம். அதன் விளைவாக பலவிதப் பொருட்களின் மேற்பரப்பிலும் இவ்வைரஸ் உயிருடன் இருக்கலாம்.   மேலும் 98டிகிறி பரனைட் வெப்பநிலையில் கண்ணாடி, உலோகம், துணிகள், பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் காகிதம் என்பவற்றின் மேற்பரப்பிலும் இவை உயிருடன் காணப்பட முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.  

உஷ்ண காலநிலையில் கொரோனா  

இது உஷ்ணம் அதிகமாகக் காணப்படும் போது இவ்வைரஸ் தாக்கம் தீவிரமாக இராது என நிலவும் அபிப்பிராயத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைகின்றது. இலங்கை மருத்துவ நிபுணர் பிரியங்கா ரணசிங்கவும், உலக சுகாதார ஸ்தாபனமும் இதே கருத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.  

ஆனால் ஜோன் கொப்கின் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் ஸ்டெபன் பரல் 'ஐக்கிய அமெரிக்கா வெப்ப காலநிலைக்கு நகர்ந்ததும் இவ்வைரஸ் தாக்கம் இயல்பாகவே குறைவடைந்துவிடும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 ஹொங்கொங்க் பல்கலைக்கழகத்தின் நோயியல் நிபுணர் டொக்டர் ஜோன் நிக்கொலஸ், 'கொரோனா வைரஸ் சூரிய வெளிச்சம், வெப்பம், ஈரப்பதன் ஆகிய மூன்றையும் விரும்புவதில்லை' என்றும் 'இச்சூரிய வெளிச்சம் இவ்வைரஸின் வளர்ச்சியை அரைவாசியாகக் குறைத்துவிடும். ஆனால் இது இருட்டில் 15 – 20நிமிடங்கள் உயிருடன் இருக்கலாம். எனினும் இவ்வைரஸை அழிக்க சூரிய வெளிச்சம் மிகச்சிறந்தது' என்றும் கூறியுள்ளார்.   ஜேர்மன் நாட்டின் சோதனை மற்றும் நோய்த்தொற்று ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் வைரஸ் நுண்ணுயிரியல் நிபுணரான தோமஸ் பிட்ச்மனை மேற்கோள் காட்டி, 'இவ்வைரஸ் அதிக உஷ்ணத்திற்கு ஈடுகொடுக்கக்கூடியதல்ல. வெப்பம் அதிகரிக்கும் போது அது சிதைவடைந்துவிடும்' என டச்வெல்லே குறிப்பிட்டுள்ளார்.   

அவதானிப்புக்கள்  

உஷ்ண காலநிலையில் இவ்வைரஸின் நிலை தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் நிலவுகின்ற இதேவேளையில், சீன தொற்று நோயியல் நிபுணர்கள் குழுவினர் ‘இவ்வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் குறித்த இடத்திலிருந்து அப்புறமாகிச் சென்ற பின்னரான முதல் 30நிமிட காலப்பகுதிக்குள் அவ்விடத்திற்குள் வரும் போது இவ்வைரஸ் தொற்ற முடியும் என்பதையும் இவ்வைரஸ் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து சுமார் 15அடிகள் தூரத்திலிருந்த நபரொருவருக்கும் இது தொற்றியமையையும் அவதானித்துள்ளனர்.   அதனால் பொது இடங்களிலும் சனநெறிசல் மிக்க இடங்களிலும் 3 – 6அடிகள் தூரத்திற்கு ஏனையவர்களிடமிருந்து விலகி இருப்பதன் மூலம் இவ்வைரஸ் பரவுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால் குளிரூட்டப்பட்ட அறையில் இவ்வைரஸ் பரவும் தூரம் அதிகம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.  

அறிகுறிகள்  

அதன் காரணத்தினால் தும்மும் போதும் இருமும் போதும் வெளிப்படும் திரவத் துளிகளால் இவ்வைரஸ் அதிகம் பரவுவதால் இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களிடமிருந்து ஏனையவர்கள் விலகி இருக்க வேண்டும். ஆனால் இவ்வைரஸின் நோயரும்பு காலம் 01முதல் 14நாட்களாகும். இக்காலப்பகுதியில் காய்ச்சல், இருமல், தடிமன், சீரற்ற இதயத்துடிப்பு, நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு, தலைவலி, வரண்ட தொண்டை, செஞ்சுவலி போன்றவாறான அறிகுறிகள் தென்பட்டால் தாமதியாது மருத்துவரை அணுக வேண்டும். அவர்களது ஆலோசனையுடன் சிகிச்சை உட்பட மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

தவிர்த்துக்ெகாள்ள...  

அத்தோடு ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டுக்கு வெளியே சென்று வந்ததும் சுத்தம் செய்து கொள்வதும், கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்வதும்  கண், மூக்கு, வாய் மற்றும் முகம் என்பவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்த்துக் கொள்வதும் இன்றியமையாததாகும். பொது இடங்களுக்கு செல்வதையும், தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதையும் தவிர்த்து வீடுகளில் இருப்பதே சிறந்ததாகும்.  

உலகலாவிய ரீதியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள இவ்வைரஸின் பரவுதலைத் தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் நாடுகளும் நகரங்களும் கிராமங்களும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் குணப்படுத்தவென விஷேட சிகிச்சை முறைகளும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தவிர்ப்பு நடவடிக்கைகள் இவ்வைரஸின் சவாலை முறியடிப்பதற்கு இப்போதைக்கு சிறந்த ஏற்பாடாகும். 

மர்லின் மரிக்கார் 


Add new comment

Or log in with...